Sunday, May 16, 2010

ஓடிப்போலாமா

கல்லூரி மாணவர் பரிமள். படிப்பு ஏறாமல் ஒன்பது பாடங்களில் அரியர் வைத்து நண்பர்களுடன் தான்தோன்றித்தனமாக சுற்றுகிறார். அவர் கண்ணில் சந்தியா பட காதல்...

பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் வீட்டில் குடியேறி காதல் கணை வீசுகிறார். ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. ஒன்பது அரியர் வைத்திருக்கும் நீ எனக்கு தகுதி இல்லை என்கிறார். இதனால் பரிமள் ராப்பகலாக படித்து அனைத்து பாடங்களிலும் தேறுகிறார்.

ஆனாலும் சந்தியா மனம் மாறவில்லை. தனது தந்தை கோட்டா சீனிவாசுக்கும் மாமா மகாதேவனுக்கும் தீராத பகை. இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்க்க சந்தியா போராடுகிறார். வீட்டை விட்டு ஓடிவிடு. திரும்பி வரும்போது உன்னை யாரும் கட்டிக்கமாட்டார்கள். வேறு வழியின்றி எனக்கு உன் தந்தை திருமணம் செய்து வைப்பார் பிரிந்த குடும்பம் சேர்ந்து விடும் என்று மாமா மகன் ஆலோசனை சொல்ல அதன்படி வீட்டை விட்டு ஓடுகிறார்.

பரிமளும் வேறு விதமாய் காய் நகர்த்த அதே நாளில் வீட்டை விட்டு ஓடுகிறார். இருவரும் காதலித்து ஓடிவிட்டதாக அபார்ட்மென்ட் அல்லோலப்படுகிறது. ஊட்டிக்கு செல்லும் சந்தியாவை பின் தொடர்ந்து செல்லும் பரிமள் அவரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

ஒரே வீட்டில் தங்குகின்னர். சந்தியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை மனம்மாறச் செய்கிறது. இருவரும் ஊருக்கு திரும்புகின்றனர். ஓடிப்போன அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.

இதையடுத்து முறைப்பையனுடன் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது தன் மீதுள்ள காதலில் பரிமள் ஊட்டிக்கு வந்ததும் தன் மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பும் சந்தியாவுக்கு தெரிகிறது. பரிமள் மேல் காதல் கொள்கிறார். இன்னொரு புறம் சந்தியா முறைப்பையனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் நிறுத்தப்படுகின்றனர். காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.

நடிகை சங்கீதாவின் சித்தி மகன் பரிமள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம். துறுதுறு மாணவனாக வரும் அவர் காதல் வயப்பட்டதும் படிப்பில் சீரியஸ் ஆகி அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்வதும் காதல் கை கூடாமல் துவண்டு நிற்பதும் பக்குவப்பட்ட நடிப்பு.

சந்தியாவை மடக்க அவருக்கு தெரியாமல் பின்னால் ஓடிப்போனதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதலிக்காக குளிரில் நடுங்கி டீ கடையில் உறங்கும்போது பரிதாப பட வைக்கிறார்.

ஆரம்பத்தில் பரிமளை உதாசீனம் செய்யும் சந்தியா தனது செருப்பு, பையை பீரோவில் பாதுகாத்து வரும் பரிமள் காதலை உணர்ந்து தடுமாறுவது ஜீவன்.

காதல் தூது போய் தோட்டா சீனிவாசராவிடம் அடிபடும் சுமன் ஷெட்டி சிரிக்க வைக்கிறார். இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றனர். கலகலப்பான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கண்மணி. வீடு, காம்பவுண்ட் என நகரும் நாடகத்தன காட்சிகள் வேகத்தடை போடுகின்றன.

கந்தகோட்டை

காதலித்து திருமணம் செய்த பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து காதலையே வெறுக்கிறார் நகுலன். காதல் ஜோடிகளை பிரித்து சந்தோஷப்படுகிறார். வீட்டை விட்டு ஓடும் காதலர்களை பெற்றோரிடம் பிடித்து கொடுக்கிறார். பூர்ணா இதற்கு நேர்மாறானவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

உறவினர் பையனின் காதலை நிறைவேற்றிவைக்க நாகர்கோவிலில் இருந்து சென்னை வருகிறார். அப்போது பூர்ணாவும் நகுலும் மோதிக்கொள்கிறார்கள். உறவினர் பையன் காதலிப்பது நகுலின் தங்கை என தெரிய அதிர்ச்சி.

நகுலனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வைக்கிறார். வந்த காரியம் முடிந்ததும் ஊருக்கு புறப்படும் பூர்ணாவிடம் நகுல் மனதை பறிகொடுக்கிறார். காதலையும் சொல்லிவிடுகிறார். பூர்ணாவுக்கும் நகுலை பிடிக்கிறது. ஊருக்கு போனதும் அவரும் காதலை வெளிப்படுத்துகிறார்.

உள்ளூர் தாதா சம்பத் மகன் பூர்ணாவை ஒருதலையாக காதலித்து தோல்வியில் தற்கொலை செய்து கொள்கிறான். மகன் சாவுக்கு காரணமான பூர்ணாவை விதவை கோலத்துக்கு மாற்றுகிறார் சம்பத். பூர்ணா தந்தை, தோழியையும் கொலை செய்கிறார்.

காதலியை தேடி வரும் நகுலுக்கு சம்பத் வலையில் பூர்ணா சிக்கிய விஷயம் தெரிய ஆவேசமாகிறார். சம்பத்துடன் மல்லுகட்டுகிறார். ஜெயிப்பது யார் என்பது கிளைமாக்ஸ்.

காதல் ஜோடிகளை பிரிக்கும் நகுல் கலகலப்பாய் தெரிகிறார். பூர்ணாவுடனான மோதலும் சுவாராசியமானவை. நண்பன் சந்தானம் காதலும் அதை முறிக்கும் விவேகமும் தமாஷானவை. பூர்ணா காதல் ஜோடியை சேர்த்து வைக்க பட்டணம் வருவதும் காதலி நகுல் தங்கை என்பதும் திருப்பம்...

வில்லத்தனமான முதல் பாதி கதை சீரியஸ் இல்லாமல் நகருவது காட்சிகளோடு ஒன்ற விடாமல் செய்கிறது. சம்பத் வருகைக்கு பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறுகிறது. மகன் தற்கொலை, பூர்ணா குடும்பத்தினர் சிறை வைப்பு, கொலைகள் என விறுவிறுப்பாக பயணிக்கிறது. சம்பத்தை மூன்று நாளில் வீழ்த்துவதாக சபதம் செய்து போலீசிடம் சிக்க வைத்து படிப்படியாக பலமிழக்க வைத்து கதையை முடிக்கும் நகுல் அதிரடி பரபரக்க வைக்கிறது.

பூர்ணா துறு துறு பெண்ணாக அழகு காட்டுகிறார். கொலைகார சம்பத்திடம் சிக்கி பதறுவதில் அழுத்தமான நடிப்பை பிழிகிறார். சந்தானம் சிரிக்க வைக்கிறார்.

காதல், கலகலப்பு, ஆக்ஷன் எனவிறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சக்திவேல். தினா வின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

வேட்டைக்காரன்

ரவுடிகளை வேட்டையாடும் கல்லூரி மாணவன் கதை...

தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.

தன்னுடன் படிக்கும் மாணவியை சிட்டியை கலக்கும் ரவுடி செல்லா படுக்கைக்கு அழைக்க அவன் கோட்டையிலேயே புகுந்து நொறுக்குகிறார்.

செல்லாவின் தந்தை தாதா வேதநாயகமும் அவன் கூட்டாளிகளான குட்டி தாதாக்களும் விஜய்யை அழிக்க கை கோர்க்கிறார்கள். அதன் பிறகு ஆக்ஷன் சூடு. வயதானவர் மேல் காரை ஏற்றும் போலீஸ்காரரை விரட்டி பிடித்து தண்டிப்பதில் இருந்து விஜய்யின் ஹீரோயிசம் ஆரம்பமாகிறது.

ரெயில் நிலையத்தில் பாட்டியை வழியனுப்ப வரும் அனுஷ்கா மேல் காதல் வயப்பட்டு திருமணம், குழந்தைகள் பெற்று பெயர் சூட்டுதல் என கனவில் சஞ்சரிப்பது... தமாஷான ஆட்டோக்கார வேலை... அனுஷ்கா பாட்டியை வசியப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து செய்யும் காதல் குறும்புகள் என கலகலப்பு செய்கிறார்.

செல்லாவை பகைத்ததும் ஆக்ஷனுக்கு திரும்புகிறது. அவன் கேம்புக்குள் புகுந்து பெண்களை படுக்கைக்கு கூப்பிடுவியா என குமுறி எடுப்பது அதிரடி...

மகன் தாக்கப்பட்டதும் ஆவேசமாக அறிமுகமாகும் தாதா தேவராஜ் ஏதோ செய்யபோகிறார் என்று பார்த்தால் விஜய்யை காரில் அழைத்து போய் தனது சமூக விரோத காரியங்களை சுற்றி காட்டி விட்டு அனுப்பி வைப்பது வேகத்தடை...

செல்லாவை தண்ணீருக்குள் சமாதியாக்குவது... வேதநாயகத்தை மந்திரியாக்க விடாமல் தடுப்பது பரபர சீன்கள்.

அனுஷ்கா அழகான காதலியாய் வருகிறார். போலீஸ் அதிகாரி தேவராஜாக வரும் ஸ்ரீஹரி மிடுக்கு காட்டுகிறார். நீண்ட தலைமுடி உருட்டும் கண்களுடன் வில்லன் செல்லாவாக நடுங்க வைக்கிறார் ரவி ஷங்கர். அமைதியான வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார். சலீம் கவுஸ், கெட்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் சாயாஜி ஷிண்டே.

சத்யன், மனோபாலா சிரிக்க வைக்கின்றனர். சத்யன் கொடூரமாக கொல்லப்படுவது பரிதாபம். விஜய் மகன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் துள்ளாட்டம். கோபிநாத் ஒளிப்பதிவில் பிரமாண்டம். காட்சி அமைப்பில் விறுவிறுப்பாக கூர்தீட்டியுள்ளார் இயக்குனர் பாபுசிவன். கதையோட்டத்தில் ஜீவன் இல்லை.

எதுவும் நடக்கும்

நடிப்பு வெறியில் சைக்கோ ஆகும் இளைஞன் கதை.

திரையுலகில் பெரிய நடிகராகும் லட்சிய கனவில் வாழ்பவர் கார்த்திக்குமார். கோடீஸ்வரர் வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். மனைவி இழிவாக பேசி அடிக்கடி சண்டை போடுகிறாள். அவளால் நாடக வாய்ப்புகளும் பறிபோகிறது.

கோடீஸ்வரர் பேத்தி அபர்ணாநாயர் அமெரிக்காவில் இருந்து வருகிறார். தாத்தா வெளியூர் போய்விட்டதால் வீட்டில் தனியாக இருக்கும் அவரை உபசரித்து உதவிகள் செய்கிறார். கார்த்திக்குமார் நடிப்பு ஆர்வம் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள பிரியப்படுகிறார். அவமரியாதை செய்யும் கார்த்திக்குமாரின் மனைவி வேடத்தில் அபர்ணா நடிக்க ஒப்புக்கொள்கிறார். அங்குதான் பயங்கரம் ஆரம்பமாகிறது.

கார்த்திக்குமார் நடிப்பு சைக்கோத்தனமாக மாறுகிறது. அபர்ணாவை நிஜமான மனைவி என பாவித்து அவரை பழிதீர்க்க துடிக்கிறார். கட்டிப்போட்டு துன்புறுத்துகிறார். கேஸ் சிலிண்டரை திறந்து கொளுத்தவும் முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அபர்ணா.

முதல் மனைவியை கொன்று பிணத்தை மறைத்து வைத்திருப்பதை கண்டு அலறுகிறார். அபர்ணா கதி என்ன என்பது கிளைமாக்ஸ்.

வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் ரொஸாரியோ- மகேஸ்வரன். கோடீஸ்வரர் பேத்தியுடன் கார்த்திக்குமார் அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். அபர்ணாநாயர் வீட்டுக்குள் உயிர் பிழைக்க போராடுவது திக்... திக்... கிளைமாக்ஸ் பயங்கரம் சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

பெர்னார்ட் ஒளிப்பதிவு, ராஜின் இசையும் பலம். வீட்டுக்குள்ளேயே காட்சிகள் முடங்குவதை தவிர்த்திருந்தால் இன்னும் பயமுறுத்தி இருக்கும்.

ரேணிகுண்டா

இளம் குற்றவாளிகள் கதை...

பாசமான தாய், தந்தையின் ஒரே மகன் பத்தொன்பது வயது சக்தி. என்ஜினீயருக்கு படிக்க வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். சக்தியோ படிப்பு ஏறாமல் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்கிறான். உள்ளூர் தாதா செய்யும் கொலையை நேரில் பார்க்கும் தந்தை அவனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல தயாராகிறார். ஆத்திரப்படும் தாதா சக்தி தாய், தந்தையை கார் ஏற்றி கொல்கிறான். சக்தியையும் சிறைக்கு அனுப்புகிறான்.

அங்கு இளம் குற்றவாளிகள் பாண்டி, டப்பா, மாரி, மைக்கேல் பழக்கமாகிறார்கள். சக்திக்கு உதவ தயாராகின்றனர். ஐவரும் சிறையில் இருந்து தப்பி ரவுடியை கொல்கின்றனர். பின்னர் மும்பைக்கு தப்பி செல்கின்றனர். சக்தியையும் அழைத்து போகிறார்கள். டிக்கெட் எடுக்காததால் ரேணிகுண்டாவில் இறங்குகின்றனர். அங்கு ஜெயில் கூட்டாளி சங்கர் அறிமுகமாகிறார். அவன் உதவியோடு தங்கி கூலிக்கு கொலை செய்கின்றனர்.

பக்கத்து தெருவில் வசிக்கும் வாய் பேசாத சனுஷாவுக்கும் சக்திக்கும் காதல் மலர்கிறது. ஐந்து பேரையும் தீர்த்துக்கட்ட தமிழக என்கவுண்டர் போலீஸ்படை ரேணிகுண்டா வருகிறது. ஐவரும் தப்பினார்களா? காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்...

சக்தியாக வரும் ஜானி. கேரக்டராகவே மாறியுள்ளார். தாய், தந்தை நடுரோட்டில் சாகடிக்கப்படுவதை நேரில் பார்த்து கதறுவது... அடித்து நிர்வாணமாக தூக்கி எறியும்போது அலறுவது... என அனுதாபத்தை அள்ளுகிறார். தாய், தந்தையை கொன்றவனை ஆவேசமாக குத்தி சாகடிப்பதில் வெறி, கிளைமாக்சில் நண்பன் சாவுக்கு காரணமானவர்களை “ஏன்டா வண்டிய நிறுத்தல” என பேசிக்கொண்டே அடித்தும் கடித்தும் பிணமாக்கி தூக்கி எறிந்து தேர்ந்த ஆக்ஷனை வெளிப்படுத்துகிறார்.

போலீசை நக்கல் செய்யும் தீப்பெட்டி கணேசன் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். “ஐயே இவருக்கா பயந்தே” ஏட்டு... போ போயிட்டே இரு என மிரட்டுவது... காதல் வயப்பட்டு தலை சீவி தெரு தெருவாய் ஸ்டைல் காட்டுவது... காதல் தோல்வியில் சோகபாட்டு கேட்டு வருத்தம் காட்டுவது என முழுக்க சிரிப்பு தோரணம் கட்டுகிறார். கோஷ்டி தலைவனாக வரும் நிஷாந்த், தமிழ், சந்தீப் பாத்திரங்களும் அழுத்தமாக செதுக்கப்பட்டுள்ளன.

ஜானி, சனுஷா காதல் கவிதை... சனுஷா முறைப்பதும் அவரை பார்த்து ஜானி ஓட இவரும் வேறு தெரு வழியாக வந்து எதிரே நிற்பதும் சாரல் மழை ரகம்...

கணவனால் விபசாரத்துக்கு அனுப்பப்பட்டு தங்கைக்கு தனது நிலை வரக்கூடாது என புழுங்கி ஜானியுடன் அனுப்பும் அக்கா கேரக்டரில் வாழ்கிறார் சஞ்சனா சிங். கிளைமாக்ஸ் திகிலூட்டுகிறது. புது களத்தில் விறு விறுப்பாக கதையை நகர்த்தி முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் டைரக்டர் பன்னீர்செல்வம்.

சிறுவர்களால் இவ்வளவு பயங்கர கொலைகள் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் காட்சி அமைப்புகள் தரமான படம் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. கணேஷ் ராகவேந்திரா இசையும், ரேணிகுண்டா தெருக்களில் ஓடி சாடியுள்ள சக்தியின் ஒளிப்பதிவும் கை குலுக்க தகுதியானவை.

நான் அவனில்லை -2

பெண்களை ஏமாற்றி மணந்து கொள்ளையடித்து கம்பி நீட்டும் நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகம்.

ஜீவனே நாயகன். வெளிநாட்டில் ஏமாற்றும் கதை...

கணவனாக வருபவன் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஹேமமாலினி. அவரை பின் தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி வீழ்த்துகிறார் ஜீவன். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது ஹேமமாலினி கழுத்தில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த ரொக்கப் பணத்தை சுருட்டி மாயமாகிறார்.

சினிமாவில் நடிக்கும் லட்சுமி ராய் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்க ஆர்வப்படுகிறார். அது தெரிந்து பெரிய தொழில் அதிபர் என்றும் அவரது தீவிர ரசிகர் என்றும் அறிமுகமாகிறார். பிறருடைய வீட்டையும் நிலத்தையும் தன்னுடையது என நம்ப வைத்து காதல் வலையில் சிக்கவைக்கிறார். தந்திரமாய் பேசி அவரிடம் இருந்து பல கோடிகளை கறந்து விட்டு மறைகிறார்.

மாடல் அழகி ஸ்வேதாமேனன் திருமணமான ஆண்களுக்கு வலை விரித்து பணத்தை கறப்பதுடன் அவர்களின் மனைவிமார்களிடமும் மாட்டி விடுகிறார். அவரிடமும் கோடீஸ்வரன் என சொல்லி வசியப்படுத்துகிறார். வீட்டில் புகுந்து நகை பணத்தை அள்ளி நழுவுகிறார்.

வெளிநாட்டு பெண் தாதா ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி என்ற பெயரில் பழகி வாலியின் தத்துவ கவிதைகளை தான் எழுதியதாக சொல்லி ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவன் போதனைகளில் மயங்கி அவர் பக்தையாக மாறுகிறார். தன்னிடம் இருந்து பணத்தையும் வழங்குகிறார். அந்த பணத்தை ஜீவன் என்ன செய்கிறார் என்பது சென்டிமெண்ட் கிளைமாக்ஸ்...

அப்பாவி வில்லத்தனத்தில் ஆரவாரப்படுத்தியுள்ளார் ஜீவன். கனிவான பேச்சு, புத்திசாலித்தன செய்கைகளால் பெண்களை வசிப்படுத்தும் சீன்கள் ரசனையானவை.

ஹேமமாலினியை மடக்க உங்கள் முகம் பார்த்து போனால் சம்பள உயர்வு, பதவி உயர்வெல்லாம் கிடைக்கிறது என்பதும் அவர் சொன்ன இடத்தில் விடிய விடிய உட்கார்ந்து இருப்பதும் ரகளை.

ஸ்வேதா மேனனை அலட்சியபடுத்துவதுபோல் விழவைத்து பணப்பெட்டியை வழித்தெடுத்து, மாயமாவது... லட்சுமிராயிடம் வேறொருவர் நிலத்தை காட்டி இங்கு உங்கள் பெயரில் ஸ்டூடியோ கட்டப்போகிறேன் என்று கூலாக சொல்வது... என உலக மகா மோசடித்தனத்தில் ஜொலிக்கிறார். கொள்ளைக்காரியாக வரும் ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி பாடல் வரிகளை மொழி பெயர்த்து சொல்லி சன்னியாசியாக மாற்றி சொத்துக்களை அபகரிப்பது வயிற்றை புண்ணாக்கும் காமெடி..

ஊனமுற்ற சங்கீதாவுக்கு உதவுவதன் மூலம் மனதில் இறங்குகிறார். இலங்கை பிரச்சினையோடு சங்கீதா கேரக்டரை இணைத்து இருப்பதும் பிரிந்த குழந்தையை அவரோடு சேர்த்து வைக்க ஜீவன் போராடுவதும் ஜீவன்... மற்ற நாயகிகளிடம் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

பெரிய நடிகை லட்சுமிராய் சுலபமாக ஏமாறுவது சினிமாத்தனம். வித்தியாசமான கதை களத்தில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் செல்வா.

மத்திய சென்னை

குப்பத்து ஜனங்கள் நலனுக்காக போராடும் இளைஞன் கதை...

குடிசைப்பகுதியில் வசிக்கும் ஜெய்வந்துக்கு சினிமா டைரக்டராக லட்சியம். கம்பெனிகள் படியேறி வாய்ப்பு தேடுகிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சேரி மக்களை ஏமாற்றி தஸ்தாவேஜூகள் தயாரித்து அந்த இடத்தை அபகரிக்க முயல்கிறார் மகாதேவன். ஜெய்வந்த் அவரை எதிர்க்கிறார். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் பத்து கோடி ரூபாய் தந்து நிலத்தை மீட்பதாக சவால் விடுகிறார். பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று தவிக்கும்போது மகாதேவன் மகள் ரம்யா பர்ணா படம் டைரக்டு செய்யும்படி ஆலோசனை சொல்கிறார். அப்படத்தை தானே தயாரிப்பதாக பணமும் கொடுக்கிறார். படத்தை முடித்ததும் ரிலீஸ் செய்யவிடாமல் மகாதேவன் தடுக்கிறார். எதிர்ப்பை முறியடித்து படத்தை வெளியிட்டாரா? என்பது கிளைமாக்ஸ்...

லட்சியத்துக்காக போராடும் இளைஞன் கேரக்டரில் பிரகாசிக்கிறார் ஜெய்வந்த். தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கியதும் சேரி மக்களுக்கு சேலை, பாத்திரங்கள் என பொருட்களை வாங்கி குவித்து ஹீரோயிசம் செய்கிறார். குடிசைகளை இடிக்கும் வில்லன் கூட்டத்தோடு மோதி ஆக்ஷனில் வேகம் காட்டுகிறார்.

வில்லன் மகளுடன் மோதல் வந்து காதல் மலர்வது பழைய பார்முலா. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும்போது குப்பத்து மக்கள் நகை பணம் வசூலித்து கொடுத்து ஜெய்வந்துக்கு உதவுவது சென்டிமென்ட். படம் ரிலீசாகுமா? ஆகாதா? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பில் கிளைமாக்ஸ் சீன்கள் நகர்கின்றன.

குப்பத்தை மீட்க பத்து கோடி தருவதாக சவால் விடுவதும் அதற்காக உழைப்பதும் ஒட்டவில்லை. வில்லன் மகளாக வரும் ரம்யா பர்ணா காதலனுக்கு உதவி விட்டு பரிதாபமாக மடிந்து போகிறார். மகாதேவன் பாசம் காட்டி மோசம் செய்யும் வில்லங்கமான வில்லன். பிரகாஷ்ராஜ் டைரக்டர் வேடத்தில் கம்பீரம். கஞ்சா கருப்பு, சார்லி சிரிக்க வைக்கின்றனர்.

சினிமா விஷயங்களையும் சேரி மக்கள் யதார்த்த வாழ்வையும் இணைத்து கலகலப்பாக கதையை நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் விவேகானந்த்- வீரசிங்கம். இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை.