Sunday, May 16, 2010

அதே நேரம் அதே இடம்

காதலித்து ஏமாற்றிய பெண்ணை பழி வாங்கும் இளைஞன் கதை...

நிழல்கள் ரவி மகன் ஜெய். படித்து வேலையின்றி சுற்றுகிறார். அவருக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் மலர்கிறது. தந்தைக்கு இவ்விஷயம் தெரிய வேலை செய்து சம்பாதித்து விட்டு திருமணம் செய்து கொள் என்கிறார். அவர் அறிவுரைப்படி ஆஸ்திரேலியாவில் கிடைத்த வேலையில் சேரப்போகிறார். ஒருவருடம் பிரிந்திருப்பது என்று காதலர்கள் முடிவு செய்கின்றனர்.

கைநிறைய சம்பாதித்து நாடு திரும்பும்போது ஜெய்க்கு அதிர்ச்சி. விஜயலட்சுமி பணக்கார மாப்பிள்ளை ராகுலை மணந்து குடித்தனம் நடத்துகிறார். விஜயலட்சுமியிடம் ஆவேசப்படுகிறார். ஆனால் அவரோ பணம் தான் முக்கியம் என்று சொல்லி ஜெய்யை உதாசீனம் செய்கிறார்.

உன்னை ஏமாற்றிய அவளை பழிவாங்கு என்று நண்பன் வெறியேற்றுகிறான். அதன்படி விஜயலட்சுமிக்கு தொல்லை கொடுக்கிறார். அதிலிருந்து தப்ப ஒருநாள் என்னை அனுபவித்துக் கொள் என்கிறார் விஜயலட்சுமி. ஜெய் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

ஜெய்-விஜயலட்சுமி காதல் வயப்படும் சீன்கள் கலகலப்பு. தோல்வியில் ஜெய் சோகம் காட்டுகிறார். விஜயலட்சுமி கணவனே ஜெய்க்கு நண்பனாக இருப்பதும், விஜயலட்சுமியை பழிவாங்க அவன் தூண்டுவதும் திருப்பங்கள். காதலித்து ஏமாற்றும் பெண்கள் மேல் வெறுப்பு காட்டும் ராகுல் தனது மனைவியின் கடந்த வாழ்வு தெரிந்தால் என்ன செய்வாரோ என்று பதட்டப்பட வைக்கிறார். விஜயலட்சுமியை ஜெய் பழி தீர்க்கும் கிளைமாக்ஸ் பரபரக்க வைக்கிறது. விஜயலட்சுமி காதலும், கவர்ச்சியும் காட்டுகிறார்.ஜீவா கோஷ்டி காமெடி ரகளை. பவன் சேகர் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையில் பாடல்கள் இனிமை.

காதல் கிரைம் கதையை இளமையாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் பிரபு.எம். திரைக்கதையை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பழி தீர்த்தல் காதல் புனிதத்தை அடிபட செய்கிறது.

No comments:

Post a Comment