Sunday, May 16, 2010

ரேணிகுண்டா

இளம் குற்றவாளிகள் கதை...

பாசமான தாய், தந்தையின் ஒரே மகன் பத்தொன்பது வயது சக்தி. என்ஜினீயருக்கு படிக்க வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். சக்தியோ படிப்பு ஏறாமல் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்கிறான். உள்ளூர் தாதா செய்யும் கொலையை நேரில் பார்க்கும் தந்தை அவனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல தயாராகிறார். ஆத்திரப்படும் தாதா சக்தி தாய், தந்தையை கார் ஏற்றி கொல்கிறான். சக்தியையும் சிறைக்கு அனுப்புகிறான்.

அங்கு இளம் குற்றவாளிகள் பாண்டி, டப்பா, மாரி, மைக்கேல் பழக்கமாகிறார்கள். சக்திக்கு உதவ தயாராகின்றனர். ஐவரும் சிறையில் இருந்து தப்பி ரவுடியை கொல்கின்றனர். பின்னர் மும்பைக்கு தப்பி செல்கின்றனர். சக்தியையும் அழைத்து போகிறார்கள். டிக்கெட் எடுக்காததால் ரேணிகுண்டாவில் இறங்குகின்றனர். அங்கு ஜெயில் கூட்டாளி சங்கர் அறிமுகமாகிறார். அவன் உதவியோடு தங்கி கூலிக்கு கொலை செய்கின்றனர்.

பக்கத்து தெருவில் வசிக்கும் வாய் பேசாத சனுஷாவுக்கும் சக்திக்கும் காதல் மலர்கிறது. ஐந்து பேரையும் தீர்த்துக்கட்ட தமிழக என்கவுண்டர் போலீஸ்படை ரேணிகுண்டா வருகிறது. ஐவரும் தப்பினார்களா? காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்...

சக்தியாக வரும் ஜானி. கேரக்டராகவே மாறியுள்ளார். தாய், தந்தை நடுரோட்டில் சாகடிக்கப்படுவதை நேரில் பார்த்து கதறுவது... அடித்து நிர்வாணமாக தூக்கி எறியும்போது அலறுவது... என அனுதாபத்தை அள்ளுகிறார். தாய், தந்தையை கொன்றவனை ஆவேசமாக குத்தி சாகடிப்பதில் வெறி, கிளைமாக்சில் நண்பன் சாவுக்கு காரணமானவர்களை “ஏன்டா வண்டிய நிறுத்தல” என பேசிக்கொண்டே அடித்தும் கடித்தும் பிணமாக்கி தூக்கி எறிந்து தேர்ந்த ஆக்ஷனை வெளிப்படுத்துகிறார்.

போலீசை நக்கல் செய்யும் தீப்பெட்டி கணேசன் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். “ஐயே இவருக்கா பயந்தே” ஏட்டு... போ போயிட்டே இரு என மிரட்டுவது... காதல் வயப்பட்டு தலை சீவி தெரு தெருவாய் ஸ்டைல் காட்டுவது... காதல் தோல்வியில் சோகபாட்டு கேட்டு வருத்தம் காட்டுவது என முழுக்க சிரிப்பு தோரணம் கட்டுகிறார். கோஷ்டி தலைவனாக வரும் நிஷாந்த், தமிழ், சந்தீப் பாத்திரங்களும் அழுத்தமாக செதுக்கப்பட்டுள்ளன.

ஜானி, சனுஷா காதல் கவிதை... சனுஷா முறைப்பதும் அவரை பார்த்து ஜானி ஓட இவரும் வேறு தெரு வழியாக வந்து எதிரே நிற்பதும் சாரல் மழை ரகம்...

கணவனால் விபசாரத்துக்கு அனுப்பப்பட்டு தங்கைக்கு தனது நிலை வரக்கூடாது என புழுங்கி ஜானியுடன் அனுப்பும் அக்கா கேரக்டரில் வாழ்கிறார் சஞ்சனா சிங். கிளைமாக்ஸ் திகிலூட்டுகிறது. புது களத்தில் விறு விறுப்பாக கதையை நகர்த்தி முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் டைரக்டர் பன்னீர்செல்வம்.

சிறுவர்களால் இவ்வளவு பயங்கர கொலைகள் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் காட்சி அமைப்புகள் தரமான படம் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. கணேஷ் ராகவேந்திரா இசையும், ரேணிகுண்டா தெருக்களில் ஓடி சாடியுள்ள சக்தியின் ஒளிப்பதிவும் கை குலுக்க தகுதியானவை.

No comments:

Post a Comment