Sunday, May 16, 2010

கந்தகோட்டை

காதலித்து திருமணம் செய்த பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து காதலையே வெறுக்கிறார் நகுலன். காதல் ஜோடிகளை பிரித்து சந்தோஷப்படுகிறார். வீட்டை விட்டு ஓடும் காதலர்களை பெற்றோரிடம் பிடித்து கொடுக்கிறார். பூர்ணா இதற்கு நேர்மாறானவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

உறவினர் பையனின் காதலை நிறைவேற்றிவைக்க நாகர்கோவிலில் இருந்து சென்னை வருகிறார். அப்போது பூர்ணாவும் நகுலும் மோதிக்கொள்கிறார்கள். உறவினர் பையன் காதலிப்பது நகுலின் தங்கை என தெரிய அதிர்ச்சி.

நகுலனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வைக்கிறார். வந்த காரியம் முடிந்ததும் ஊருக்கு புறப்படும் பூர்ணாவிடம் நகுல் மனதை பறிகொடுக்கிறார். காதலையும் சொல்லிவிடுகிறார். பூர்ணாவுக்கும் நகுலை பிடிக்கிறது. ஊருக்கு போனதும் அவரும் காதலை வெளிப்படுத்துகிறார்.

உள்ளூர் தாதா சம்பத் மகன் பூர்ணாவை ஒருதலையாக காதலித்து தோல்வியில் தற்கொலை செய்து கொள்கிறான். மகன் சாவுக்கு காரணமான பூர்ணாவை விதவை கோலத்துக்கு மாற்றுகிறார் சம்பத். பூர்ணா தந்தை, தோழியையும் கொலை செய்கிறார்.

காதலியை தேடி வரும் நகுலுக்கு சம்பத் வலையில் பூர்ணா சிக்கிய விஷயம் தெரிய ஆவேசமாகிறார். சம்பத்துடன் மல்லுகட்டுகிறார். ஜெயிப்பது யார் என்பது கிளைமாக்ஸ்.

காதல் ஜோடிகளை பிரிக்கும் நகுல் கலகலப்பாய் தெரிகிறார். பூர்ணாவுடனான மோதலும் சுவாராசியமானவை. நண்பன் சந்தானம் காதலும் அதை முறிக்கும் விவேகமும் தமாஷானவை. பூர்ணா காதல் ஜோடியை சேர்த்து வைக்க பட்டணம் வருவதும் காதலி நகுல் தங்கை என்பதும் திருப்பம்...

வில்லத்தனமான முதல் பாதி கதை சீரியஸ் இல்லாமல் நகருவது காட்சிகளோடு ஒன்ற விடாமல் செய்கிறது. சம்பத் வருகைக்கு பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறுகிறது. மகன் தற்கொலை, பூர்ணா குடும்பத்தினர் சிறை வைப்பு, கொலைகள் என விறுவிறுப்பாக பயணிக்கிறது. சம்பத்தை மூன்று நாளில் வீழ்த்துவதாக சபதம் செய்து போலீசிடம் சிக்க வைத்து படிப்படியாக பலமிழக்க வைத்து கதையை முடிக்கும் நகுல் அதிரடி பரபரக்க வைக்கிறது.

பூர்ணா துறு துறு பெண்ணாக அழகு காட்டுகிறார். கொலைகார சம்பத்திடம் சிக்கி பதறுவதில் அழுத்தமான நடிப்பை பிழிகிறார். சந்தானம் சிரிக்க வைக்கிறார்.

காதல், கலகலப்பு, ஆக்ஷன் எனவிறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சக்திவேல். தினா வின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

No comments:

Post a Comment