Sunday, May 16, 2010

மத்திய சென்னை

குப்பத்து ஜனங்கள் நலனுக்காக போராடும் இளைஞன் கதை...

குடிசைப்பகுதியில் வசிக்கும் ஜெய்வந்துக்கு சினிமா டைரக்டராக லட்சியம். கம்பெனிகள் படியேறி வாய்ப்பு தேடுகிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சேரி மக்களை ஏமாற்றி தஸ்தாவேஜூகள் தயாரித்து அந்த இடத்தை அபகரிக்க முயல்கிறார் மகாதேவன். ஜெய்வந்த் அவரை எதிர்க்கிறார். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் பத்து கோடி ரூபாய் தந்து நிலத்தை மீட்பதாக சவால் விடுகிறார். பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று தவிக்கும்போது மகாதேவன் மகள் ரம்யா பர்ணா படம் டைரக்டு செய்யும்படி ஆலோசனை சொல்கிறார். அப்படத்தை தானே தயாரிப்பதாக பணமும் கொடுக்கிறார். படத்தை முடித்ததும் ரிலீஸ் செய்யவிடாமல் மகாதேவன் தடுக்கிறார். எதிர்ப்பை முறியடித்து படத்தை வெளியிட்டாரா? என்பது கிளைமாக்ஸ்...

லட்சியத்துக்காக போராடும் இளைஞன் கேரக்டரில் பிரகாசிக்கிறார் ஜெய்வந்த். தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கியதும் சேரி மக்களுக்கு சேலை, பாத்திரங்கள் என பொருட்களை வாங்கி குவித்து ஹீரோயிசம் செய்கிறார். குடிசைகளை இடிக்கும் வில்லன் கூட்டத்தோடு மோதி ஆக்ஷனில் வேகம் காட்டுகிறார்.

வில்லன் மகளுடன் மோதல் வந்து காதல் மலர்வது பழைய பார்முலா. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும்போது குப்பத்து மக்கள் நகை பணம் வசூலித்து கொடுத்து ஜெய்வந்துக்கு உதவுவது சென்டிமென்ட். படம் ரிலீசாகுமா? ஆகாதா? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பில் கிளைமாக்ஸ் சீன்கள் நகர்கின்றன.

குப்பத்தை மீட்க பத்து கோடி தருவதாக சவால் விடுவதும் அதற்காக உழைப்பதும் ஒட்டவில்லை. வில்லன் மகளாக வரும் ரம்யா பர்ணா காதலனுக்கு உதவி விட்டு பரிதாபமாக மடிந்து போகிறார். மகாதேவன் பாசம் காட்டி மோசம் செய்யும் வில்லங்கமான வில்லன். பிரகாஷ்ராஜ் டைரக்டர் வேடத்தில் கம்பீரம். கஞ்சா கருப்பு, சார்லி சிரிக்க வைக்கின்றனர்.

சினிமா விஷயங்களையும் சேரி மக்கள் யதார்த்த வாழ்வையும் இணைத்து கலகலப்பாக கதையை நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் விவேகானந்த்- வீரசிங்கம். இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை.


No comments:

Post a Comment