இந்திய ராக்கெட்டை வீழ்த்தி வளர்ச்சியை நாசம் செய்ய வரும் வெளிநாட்டு தீவிரவாத கும்பலை ஐந்து மாணவிகளுடன் எதிர்த்து அழிக்குள் இளைஞன் கதை.வன இலாகா ஊழியர் துருவன். பழங்குடி இனத்தை சேர்ந்தவன். என்.சி.சி. மாணவிகளுக்கு பயிற்சியும் அளிக்கிறான். துருவனிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து மாணவிகள் அவனை தாழ்ந்த ஜாதி என இழிவு படுத்துகின்றனர். மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர். தொல்லைகளை பொறுமையாக தாங்கிக்கொள்கிறான்.
அந்த மாணவிகளை காட்டுக்குள் ஒரு நாள் பயிற்சிக்காக அழைத்து போகிறான் துருவன். அங்கு வேன் விபத்தாகிறது. ஊருக்கு திரும்ப முடியாமல் மலை உச்சியில் டெண்ட் போட்டு தங்குகின்றனர். இருட்டில் இரு வெள்ளைக்காரர்கள் நவீன எந்திர துப்பாக்கிகளுடன் போவதை ஒரு மாணவி பார்த்து துருவனிடம் சொல்கிறாள். அவர்கள் இந்தியா ஏவ உள்ள ராக்கெட்டை அழிக்க வந்த அயல் தேச கூலிப்படை என்பதை துருவன் புரிகிறான். தீவிரவாதிகளை அழிக்க புறப்படுகிறான். மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து துருவனுடன் செல்கின்றனர்.
ஒரு இடத்தில் பதினாறு தீவிரவாத கும்பலை எதிர்த்து துருவனும் மாணவிகளும் சண்டையிடுகின்றனர். இரு மாணவிகள் பலியாகிறார்கள். இன்னொரு புறம் ராக்கெட்டை குறிபார்த்து சுட ஏவுகணையை நிறுத்தி விடுகின்றனர். அதை எப்படி தடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
துருவனாக வரும் ஜெயம் ரவி ராம்போ கெட்டப்பில் கம்பீரம் காட்டுகிறார். சாதி ரீதியாக உயர் அதிகாரியும் மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்குபயிற்சி அளிக்கும் துறுதுறுப்பில் முத்திரை பதிக்கிறார்.
மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் சீன்கள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்...
மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி.
கிளைமாக்ஸ் துப்பாக்கி சண்டை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஹைடெக் ரகம். காடே தீப்பிழம்பாகி சீட் நுனியில் உட்கார வைக்கிறது. ஜெயம் ரவி ஆக்ஷன் தனத்தை அழுத்தமாக பதித்துள்ளார். என்.சி.சி. மாணவிகளாக வரும் தன்சிகா, லியாஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தராவின் குறும்புத்தனங்களில் “ஏ” வாடை. இறுதியில் எந்திர துப்பாக்கிகளுடன் ஆவேசமாக சண்டையிட்டு அனல் பறத்துகின்றனர்.
வில்லனாக வரும் ஹாலிவுட் நடிகர் ரோலந்த் கிக்சிங்கும் அவர் கூட்டாளிகளும் மிரட்டுகின்றனர் வடிவேலு சிரிக்க வைக்கிறார். பொன்வண்ணன், ஊர்வசி பார்திரங்களும் கச்சிதம். ஜெயம் ரவியை சாதியை வைத்து இழிவு செய்வதிலேயே ஆரம்ப காட்சிகளை நீட்டிப்போவது சலிப்பூட்டுகிறது. இரட்டை அர்த்த வசனங்களும் தாராளமாய் புழங்குகின்றன. ஆனாலும் போகப்போக சீன்களை வேகப்படுத்தி ஹாலிவுட் தரத்துக்கு உயர்கிறார் இயக்குனர் ஜனநாதன். சாதாரண வன ஊழியர் சாதித்ததை மேலதிகாரி செய்ததாக பெயர் வாங்கி ஜனாதிபதி விருது பெறுவதன் மூலம் நடைமுறை குளறுபடிகளுக்கு குட்டும் வைத்துள்ளார்.
வித்யாசாகர் இசையும், காட்டுக்குள் நடக்கும் போரை கண்ணுக்குள் நிறுத்தும் சதீஷ்குமார் ஒளிப்பதிவும் பெரிய பலம்.




















