திரையுலகில் பெரிய நடிகராகும் லட்சிய கனவில் வாழ்பவர் கார்த்திக்குமார். கோடீஸ்வரர் வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். மனைவி இழிவாக பேசி அடிக்கடி சண்டை போடுகிறாள். அவளால் நாடக வாய்ப்புகளும் பறிபோகிறது.
கோடீஸ்வரர் பேத்தி அபர்ணாநாயர் அமெரிக்காவில் இருந்து வருகிறார். தாத்தா வெளியூர் போய்விட்டதால் வீட்டில் தனியாக இருக்கும் அவரை உபசரித்து உதவிகள் செய்கிறார். கார்த்திக்குமார் நடிப்பு ஆர்வம் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள பிரியப்படுகிறார். அவமரியாதை செய்யும் கார்த்திக்குமாரின் மனைவி வேடத்தில் அபர்ணா நடிக்க ஒப்புக்கொள்கிறார். அங்குதான் பயங்கரம் ஆரம்பமாகிறது.
கார்த்திக்குமார் நடிப்பு சைக்கோத்தனமாக மாறுகிறது. அபர்ணாவை நிஜமான மனைவி என பாவித்து அவரை பழிதீர்க்க துடிக்கிறார். கட்டிப்போட்டு துன்புறுத்துகிறார். கேஸ் சிலிண்டரை திறந்து கொளுத்தவும் முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அபர்ணா.
முதல் மனைவியை கொன்று பிணத்தை மறைத்து வைத்திருப்பதை கண்டு அலறுகிறார். அபர்ணா கதி என்ன என்பது கிளைமாக்ஸ்.
வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் ரொஸாரியோ- மகேஸ்வரன். கோடீஸ்வரர் பேத்தியுடன் கார்த்திக்குமார் அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். அபர்ணாநாயர் வீட்டுக்குள் உயிர் பிழைக்க போராடுவது திக்... திக்... கிளைமாக்ஸ் பயங்கரம் சீட் நுனியில் உட்கார வைக்கிறது.
பெர்னார்ட் ஒளிப்பதிவு, ராஜின் இசையும் பலம். வீட்டுக்குள்ளேயே காட்சிகள் முடங்குவதை தவிர்த்திருந்தால் இன்னும் பயமுறுத்தி இருக்கும்.

No comments:
Post a Comment