Sunday, May 16, 2010

கண்டேன் காதலை

தொழில் அதிபர் மகன் பரத் காதலில் தோற்று விரக்தியாகிறார். சொத்து சுகங்களை ஒதுக்கிவிட்டு கால் போன போக்கில் போகிறார். மதுரை செல்லும் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறுகிறார். அதே ரெயிலில் பயணம் செய்யும் தமன்னா எதையும் சீரியசாக எடுக்காத வளவள வாயாடி. பரத்துக்கு அவர் உதவுகிறார். பரத்தும் ரவுடிகளிடம் சிக்கும் தமன்னாவை காப்பாற்றி கைமாறு செய்கிறார்.

இருவரும் நட்பாகிறார்கள். ரெயிலை தவறவிடும் தமன்னாவை தேனியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விடுகிறார். பயணத்தில் தமன்னாவால் கவலைகளை விட்டு புத்துணர்ச்சி பெறுகிறார். தமன்னாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர் தன்னுடன் படித்த கவுதமை ஏற்கனவே காதலிப்பதால் வீட்டை விட்டு ஓடுகிறார். பரத்தும் தமன்னாவுடன் சென்று காதலன் வசிக்கும் ஊட்டியில் கொண்டு விட்டு விட்டு பிரிவு வலியோடு சென்னை திரும்புகிறார்.

தமன்னாவின் வாழ்வியல் மந்திரங்களை மனதில் பதித்து நஷ்டமான பிசினசை தூக்கி நிறுத்துகிறார்.

தமன்னாவை காணாத பெற்றோர் ஒன்பது மாதத்துக்கு பிறகு பரத்தை தேடி பிடித்து கேட்கின்றனர். தமன்னாவை அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்து ஊட்டிக்கு செல்கிறார். அங்கு காதலனால் ஏமாற்றப்பட்டு சந்தோஷங்களை தொலைத்து நிற்கும் தமன்னாவை பார்க்கிறார். கவுதமிடம் பேசி இருவரையும் சேர்த்து வைத்து தேனிக்கு அழைத்து வருகிறார். தமன்னா குடும்பத்தினரோ பரத்துக்கும் தமன்னாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். தமன்னா யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

அழுத்தமான காதலை வித்தியாசமான காட்சியமைப்பில் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
கோட், சூட்டில் இளம் தொழில் அதிபர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பரத்.காதலி இன்னொரு வரை மணந்ததும் நொறுங்கி சோகமாகுகிறார். தமன்னாவின் கள்ளமில்லா வெள்ளை சேட்டைகளில் ஈர்ப்பாகி மீண்டு வருவது நச்...

ஊட்டியில் காதல் தோற்று துவண்டு நிற்கும் தமன்னாவிடம் நான் அழுதுட்டு இருந்தப்போ நீ சிரிச்சிட்டு இருந்தே. நான் சிரிக்கும் போது நீ அழுதுக்கிட்டு இருக்கே என்று சொல்லி கண் கலங்கும் போது அழ வைக்கிறார்.

தன்னை மாப்பிள்ளையாக்கி திருமண வேலைகளில் ஈடுபடும் தமன்னா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பதும் அது நிஜமாகட்டும் என்ற சந்தோஷ உணர்வையும் ஒரு நேரத்தில் வெளிபடுத்துவது சபாஷ்.

நான் தேனி பொண்ணு என்று பட பட வென பொரியும் அஞ்சலி கேரக்டரில் வாழ்கிறார் தமன்னா. ரெயில் நிலையத்தில் இரண்டு ரூபாய்க்காக கடைக்காரனிடம் சண்டையிட்டு ரெயிலை தவறவிடுவது... முறைமாப்பிள்ளையை கட்டிக்க மறுத்து ஓடுவது துறுதுறு. காதலன் கைகழுவும் போது பரிதாபபட வைக்கிறார்.

தமன்னா தாய் மாமனாக வரும் சந்தானம் காமெடியில் வெளுக்கிறார். வித்யாசாகரின் பின்னணி இசை: பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் அழகூட்டுகிறது. முன்னா கேரக்டரும் வலிமை.

கணவனை விட்டு ஆடிட்டருடன் ஓடிய தாயின் காதலை நியாயப்படுத்தும் சீன்கள் கலாசார பிழை. கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பும் துறு துறுப்புமாய் நிமிர வைக்கிறது.

No comments:

Post a Comment