Sunday, May 16, 2010

ஜகன் மோகினி

ஜெயமாலினி நடிப்பில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வந்த ஜகன் மோகினியின் ரீமேக்கே இப்படம்.

பச்சை மலைத்தீவு மன்னன் நரசிம்மராஜூவின் ஒரே மகன் ராஜா. பட்டத்து இளவரசர். குருகுல வாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்புகிறார். வழியில் கொள்ளையர்கள் நடமாட்டம் பற்றி கேள்விப்பட்டு அவர்களை பிடிக்கமாறு வேடத்தில் சங்கு மலைத்தீவுக்கு வருகிறார். அந்த தீவின் இளவரசன் ரியாஸ்கானே அலைக்கள்ளன் பெயரில் கொள்ளைகள் புரிவது தெரிகிறது. அவரோடு மோதி கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

அப்போது தீவில் வசிக்கும் நமீதா அழகில் மயங்குகிறார். இளவரசன் என்பதை மறைத்து நமீதாவிடம் பழகி காதல் புரிகிறார். ஊருக்கு போய் பெற்றோர் சம்மதம் வாங்கி திரும்பி வந்து மணப்பதாக வாக்குறுதி கொடுத்து நாட்டுக்கு திரும்புகிறார். அங்கு மாமன் மகள் நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ராஜாவோ காதலி நமீதாவையே மணப்பேன் என பிடிவாதம் செய்கிறார். மன்னன் நரசிம்மராஜூ காதலை ஏற்பது போல் நடித்து தந்திரமாக ஆட்களை ஏவி நமீதாவை கொலை செய்து விடுகிறார். நமீதா இன்னொருவருடன் நாட்டை விட்டு ஓடி விட்டதாக ராஜாவை நம்ப வைக்கின்றனர்.

பிறகு ராஜாவுக்கும் நிலாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அதை தடுக்க நமீதா மோகினி பேயாய் நாட்டுக்குள் வருகிறார். இன்னொரு புறம் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ் இளவரசன் ராஜாவை அம்மனுக்கு பலியிட்டு உலகை ஆளும் சக்தி பெற அந்நாட்டுக்கு வருகிறார்.

மோகினியிடமும் மந்திரவாதியிடமும் சிக்குண்டு மன்னர் குடும்பம் படும் அவஸ்தைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதும் கிளைமாக்ஸ்...

மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்துகிறது படம். கடலில் இருந்து பனை உயரத்துக்கு தண்ணீர் உருவாக எழுந்து நாட்டுக்குள் நடந்து வரும் மோகினி உருவம்... மரம் கைநீட்டி ஆட்களை பிடித்து கொல்லுவது... மெத்தையில் பறக்கும் இளவரசன்... அந்தரத்தில் பறக்கும் மனிதர்கள் என மாயா ஜால வித்தைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் என்.கே. விஸ்வநாதன்.

நமீதா மோகினி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி கவர்ச்சியை அள்ளி இறைக்கிறார். இளவரசன் மேல் காதல் வயப்பட்டு நீருக்குள் அநியாயமாக கொல்லப்பட்டு பரிதாபப்பட வைக்கிறார். மோகினியாக மாறி மந்திரவாதியுடன் மோதுவதிலும் காதலனை கடத்த முயற்சிப்பதிலும் ஆவேசம். கொலையாளிகளை பழி தீர்ப்பதில் விறு விறுப்பு.

நிலா கேரக்டரில் ஒட்டவில்லை. இளவரசனை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் கடைசி காட்சியில் நிற்கிறார்.

இளவரசனாக வரும் ராஜா பாத்திரத்தில் அழுத்தமாய் பொருந்துகிறார். ஜகன் மோகினியிடம் காதல் வயப்படுவதில் இனிமை காட்டுகிறார். கொள்ளையன், அலைக்கள்ளனுடன் மோதுவதில் ஆவேசம்.

வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி சிரிக்க வைக்கின்றனர். மோசக்கார மந்திரவாதியாக கோட்டா சீனிவாசராவ் மிரட்டுகிறார். நமீதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசன் ரியாஸ்கான் பாத்திரங்களும் வலுவானவை.

திரைக்கதையை இன்னும் கூராக செதுக்கி இருக்கலாம்.

இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை.

No comments:

Post a Comment