தம்பியிடம் பாசம், காதலியிடம் நேசம், முதலாளியிடம் விசுவாசம் என அத்தனை வாசங்களுடன் தனது நடிப்பையும் சேர்த்து அரைத்த 'கரண் மசாலா' தான் இந்த மலையன்.சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் கரண் தன் முதலாளியான சரத்பாபுவின் மீது அளவு கடந்த விசுவாசம் வைத்திருக்கிறார். ஏன் இந்த அநியாய விசுவாசம் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் சொல்ல இயக்குநர் மறக்கவில்லை. சிறுவயதில் தன் அம்மாவுடன் பஞ்சம் பிழைக்கப் பசியுடன் வரும் கரணுக்கு சோறு போட்டு ஆதரவு கொடுக்கிறார் சரத்பாபு. அதனால் தான் கரண் தன் முதலாளியிடம் விசுவாசமாக இருக்கிறார்.
ஒரு புறம் தன் தம்பியை கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறார். மறுபுறம் இஷ்டப்பட்டு ஷம்முவைக் காதலிக்கிறார். வில்லன் இல்லையா ! என்கிறீர்களா? இருக்கிறார் ராஜன் பி.தேவ் மற்றும் அவருடைய மகனான சக்தி குமார். கரணின் முதலாளியைத் தொழில் ரீதியான போட்டியின் காரணமாகக் கொலை செய்ய முயல்கிறார்கள். இதனால் கரணுக்கு எதிரியாகிறார்கள்.
எதிரிகளைக் கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு, தனது காதல் காட்சியை ஷம்முவுடன் தொடங்கும் கரணுக்கு அடுத்ததாக வருவது செண்டிமென்ட். கரண். ஷம்மு காதல் விவகாரம் ஷம்முவின் குடும்பத்திற்குத் தெரிய வருகிறது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கரணைக் கைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார் ஷம்மு. கரணும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொள்வோம் என்ற உறுதியுடன் இருக்கிறார். இந்த நல்ல மனதிற்காகக் கரணுக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதம் தெரிவிகிறார் ஷம்முவின் தந்தையான பாலா சிங்.
இந்நிலையில் கரண் பணிபுரியும் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, கரணின் காதலி உட்பட ஏராளமான தொழிலாளர்கள் இறந்து போகின்றனர். இச்சம்பவம் விபத்தல்ல; தன் முதலாளியின் எதிரிகளான சக்தி குமாரின் சதி தான் என்ற சந்தேகத்தில் அவர்களைக் கொல்லத் துடிக்கும் கரணுக்குப் பகீர் என்ற ஒரு உண்மை தெரிய வருகிறது. இச்சம்பவத்திற்கு காரணம் சக்தி குமார் இல்லை; தன் முதலாளியான சரத்பாபு தான் என்று. ஏன் சரத்பாபு அப்படி செய்தார்? சரத்பாபுவைக் கரண் என்ன செய்தார் என்பதே படத்தின் இறுதிக் காட்சி.
பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும் கதாபாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் நடிகர் கரண். தன் முதலாளியைக் கொல்ல எண்ணியவர்களைக் கொலை வெறியுடன் துரத்தும் கரணின் நடிப்பு நம்மை மிரள வைக்கிறது. அதே சமயம் அதிகமாக மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் அதிகப்படியாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
ஷம்மு கிராமத்துப் பெண் ரவுடி அல்லது சுட்டித் தனம் செய்யும் செல்லப் பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று சொல்லலாம். கிராமத்து 'கெட்டப்' ஷம்முவுக்குத் தேவையா என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.
சரத்பாபு, சக்தி குமார், ராஜன் பி.தேவ், கஞ்சா கருப்பு, பாலாசிங், உதயதாரா,மயில்சாமி என அத்தனை நடிகர்களும் கரண் கட்டும் வீட்டுக்குச் செங்கல் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் எம்.பி. கோபி சிவகாசி பட்டாசு தொழிற்சாலையும் அதைச் சார்ந்த மக்களும் என்ற கருவை வைத்து, கரணுக்காகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளும் அதைப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
No comments:
Post a Comment