தமிழ்த் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட திரைக்கதை, இடைவேளை எதற்கு என்று எண்ணும் அளவிற்கு ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது படத்தின் விறுவிறுப்பு.சாமானிய மக்களில் ஒருவரான கமல்ஹாசன், சென்னையில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கிறார். அதை அவரே காவல் துறை ஆணையரான மோகன்லாலிடம் தொலைபேசியில் தெரிவிக்கிறார். முதலில் அதை அலட்சியமாக அணுகும் மோகன்லால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதையும் அதைச் செயலிழக்க வைக்கும் வழியையும் கமலே தெரிவிக்க, விஷயம் தீவிரமானது என உணர்கிறார்.
வெடிகுண்டு வைத்த நபரைப் பிடிக்கத் திட்டம் தீட்டும் காவல் துறை, அதே நேரத்தில் எதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது? என்ன வேண்டும்? என்று கமலைக் கேட்கிறது. சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் தான் சொல்கிற இடத்திற்கு அவர்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கமல் காவல் துறையிடம் தெரிவிக்கிறார்.
அவர்களைக் காவல் துறை விடுதலை செய்ததா, அவர்களுக்கும் கமலுக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் படத்தின் முடிவு.
தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்படும் வழக்கமான திரைக்கதை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதே இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். ஒரு சாதாரண சம்பவத்தைச் சலிப்பு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, சுறுசுறுப்பாகப் படத்தை நகர்த்திய இயக்குநர் சக்ரிக்கு ஒரு பலமான பாராட்டு.
கடைசி வரைக்கும் தனது பாத்திரத்தின் பெயரைச் சொல்லாமல் தன் நடிப்பாலும், முக பாவனைகளாலும் ரசிகர்களைச் சொக்க வைத்திருக்கிறார் கமல்ஹாசன். இது இவருக்குப் புதியது அல்ல என்றாலும் முன்னணி நாயகனாக இருந்துகொண்டு இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது ஆச்சரியம்தான். (இதனால் தான் இவர் உலக நாயகன்!)
படத்திற்குக் கமல்ஹாசன் ஒரு கண் என்றால், ராகவன் மாறார் என்ற கதாபாத்திரத்தில் காவல் துறை ஆணையராக வரும் மோகன்லாலும் ஒரு கண். இந்த இரு கண்களும் ரசிகர்களின் கண்களின் இமைகளை ஒன்று சேரவிடாமல் பார்த்துக்கொள்வதில் போட்டி போடுகின்றன. மலையாளம் கலந்த தமிழில் பேசும் மோகன்லால், தனது நடிப்பால் மலைக்க வைத்துள்ளார்.
படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் அவை தனி ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளன. பின்னணி இசையில் தன்னை முன்னணியில் நிறுத்திக்கொள்ள ஸ்ருதிஹாசன் முயன்றுள்ளார்.
சிற்பி சிலையைச் செதுக்குவதைப் போல படத்தின் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனி. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முதன்மை வகிக்கும் கமல்ஹாசன், இப்படத்தில் 'ரெட் ஒன்' கேமராவைப் பயன்படுத்தியுள்ளார்.
மக்களைச் சிந்திக்க வைக்கும் படமாக இருந்தாலும் தனது நையாண்டி வசனத்தின் மூலம் சிரிக்கவும் வைத்துள்ளார் வசனகர்த்தா கமல்ஹாசன். எப்போதும் போல கடவுளிடம் தனக்கு உள்ள பகையை இப்படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல்.
மக்களுக்குப் பாடமாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில், மோகன்லால் கமலிடம் ஒரு காட்சியில் வெடிகுண்டு தயாரிக்க யார் சொல்லிக் கொடுத்தது, உன் குடும்பத்தில் யாராவது வெடிகுண்டு செய்கிறார்களா என்று கேட்க, இணையதளத் தேடலில் வெடிகுண்டு என்று அடித்து பாருங்கள். புகைப்படங்களுடன் உங்களுக்கு வெடிகுண்டு செய்வதை வகுப்பு எடுப்பார்கள் என்று கமல் கூறுவதைக் கேட்டு வெடிகுண்டு தயாரிக்காமல் இருந்தால் சரி. நமது மக்கள் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களைத் தான் எளிதில் புரிந்துகொள்வார்கள்.
No comments:
Post a Comment