Wednesday, May 12, 2010

கண்ணுக்குள்ளே

Justify Fullமிதுன், யுகேந்திரன் பள்ளித்தோழர்கள். தாய், தந்தையை இழந்த மிதுன் பாதிரியார் சரத்பாபு பாதுகாப்பில் வளர்கிறார். சிறுவயதில் விளையாடும்போது யுகேந்திரனால் அவர் கண்பார்வை போகிறது. பார்வையிழந்தோர் பள்ளியில் படித்து வயலின் கலைஞராகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு சென்று நண்பனை சந்திக்கிறார். அதே ஊரில் சர்ச்சில் வேலைக்கும் சேருகிறார். பார்வையற்றவர் என முறைப்பெண் கட்டிக்க மறுக்கிறாள். யுகேந்திரன் தங்கை அனுவுக்கு மிதுன் மேல் பரிதாபம் வருகிறது. பிறகு அதுவே காதலாக மலர்கிறது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.

அப்போது யுகேந்திரன் விபத்தில் சிக்குகிறார். தனது கண்களை மிதுனுக்கு தானமாக கொடுத்து விட்டு இறந்து போகிறார். கண் பார்வை பெறும் மிதுன் காதலி அனுவை விட்டு விட்டு மாயமாகிறார். சினிமாவில் வயலின் கலைஞராகி அபர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார். குழந்தையும் பிறக்கிறது. பிறகு மீண்டும் அனுவை தேடி ஊருக்கு வருகிறார். காதலியை உதறி விட்டு ஓடியது ஏன்? மீண்டும் அனுவை சந்தித்தாரா? போன்றவற்றுக்கு நெஞ்சை உருக்கி பதில் தருகிறது கிளைமாக்ஸ்...

பட படவென பேசும் மனைவியாக அபர்ணா, தாடி பைஜாமாவுடன் அமைதியான கணவராக மிதுன். வெடுக்கென பேசும் குட்டிக்குழந்தை என ஆரம்ப “சீன்”களே வித்தியாசப்படுகின்றன. மனைவி ஏச்சுக்களை தாங்கி எதையோ பறி கொடுத்தவராக இருக்கும் மிதுன் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்.

ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறும் மிதுன் நினைவில் பிளாஷ்பேக்கில் அனு காதல். இருவரின் சந்திப்புகளும் இதய பரிமாற்றங்களும் கவித்துவம். காதலி வீடு பாழடைந்து கிடப்பது பார்த்து தவிக்கையில் மனதில் கிறங்குகிறார். பாதிரியாரிடம் அனுவை விட்டு விலகிய காரணங்கள் சொல்லி அவரை பார்க்க வேண்டும் என்று துடித்து அடங்கி போகும் அந்த கிளைமாக்ஸ் இதயங்களை பிழிந்து போடுகிறது. அன்பு, காதல், சோகம் என அத்தனையையும் முகத்தில் காட்டி தேர்ந்த நடிகராக ஒளிர்கிறார் மிதுன். அபர்ணா சிடு மூஞ்சி மனைவியாக வாழ்கிறார். அனு அன்பான காதலி.

சரத்பாபு, யுகேந்திரன், சண்முகராஜன் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. சிங்கமுத்து, முத்துக்காளையின் பஸ் பயண காமெடி சரவெடி. பார்வை இழந்த இளைஞனின் காதலை உயிரோட்டமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் லேனா மூவேந்தர்.

பழைய பாணியில் சில காட்சிகள் நகர்ந்தாலும் இறுதி சீன்கள் ஜீவனாக நிற்கின்றன. இளையராஜா இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.

No comments:

Post a Comment