இறைச்சி கடை நடத்தும் தாதா ராதாரவி. போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராயம் என சம்பாதிக்கும் அவன் ஏழைகளுக்கும் வாரி வழங்குகிறார். மகன் ஹரிகுமாரும் மருமகனும் அவருக்கு உதவியாய் இருக்கின்றனர்.
ராதாரவிக்கும் காதல் தண்டபாணிக்கும் தொழில் போட்டி வருகிறது. தண்டபாணியின் கள்ளச்சாராய வியாபாரத்தை ஹரிகுமார் அழிக்கிறார். எம்.பி.யாகும் அவர் ராதாரவி குடும்பத்தை அழிக்க போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து திட்டமிடுகிறார் அரசுக்கும் அறிக்கை அனுப்புகிறார்.
இதையடுத்து என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுயா அவ்வூருக்கு வரவழைக்கப்படுகிறார். ஹரிகுமாருக்கும் அனுயாவுக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகிறது. ரவுடி தொழிலை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். இன்னொரு புறம் ராதாரவியும் அவர் மருமகனும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஹரிகுமாரையும் தீர்த்துகட்ட திட்டம் நடக்கிறது. கொலையாளி யார்? ஹரிகுமார் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்...
அதிரடி ஆக்ஷனில் காதலை புகுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் யுரேகா. இறைச்சி கூடத்தில் கட்ட பஞ்சாயத்து கொலைகள், கடத்தல் பிசினஸ் என்பது வித்தியாசமான களம். ராதாரவி கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார். இளம் பெண்ணை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளிக்கு அளிக்கும் தண்டனை திக்... ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவே இந்த சமூக விரோத செயல்கள் என அவர் நியாயம் கற்பிப்பது சினிமாத்தனம்.
ஹரிகுமார் அதிரடி நாயகனாக பொளந்து கட்டுகிறார் எதிரியின் சாராய உறலை எரித்து அடியாட்களை துவம்சம் செய்யும் ஆரம்பமே அட்டகாசம்... போலீஸ் அதிகாரி அனுயா மேல் காதல் வயப்பட்டு அவரை முத்தமிடுவது “கிளுகிளுப்பு” காதலி முன்னால் அடங்கிப்போவது அவர் சொல்படி தந்தையை போலீசில் சரணடைய வைப்பது அழுத்தமானவை. கிளைமாக்சில் போலீஸ் காதலிதான் தந்தை, அத்தான் இருவரையும் கொன்றவர் என தெரிந்து அதிர்வதும்... ஆவேசமாகி சுட்டுக்கொல்வதும் உதறல் திருப்பங்கள்.
அனுயா அழகும் கடுகடுப்புமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஹரிகுமார் குடும்பத்துடன் நட்பாக பழகும் அவர் ரவுடிகளை ஏவி ராதாரவி மருமகனை கொல்வதும்.. ராதாரவியை வேனில் இருந்து இறக்கி சுட்டுத்தள்ளுவதும் பயங்கரம்.
கார்த்திகாவுக்கு வேலை இல்லை. காதல் தண்டபாணி ஆவேசமாக வந்து அநியாயமாய் சாகிறார். ஆனந்த்பாபுவின் அடியாள் பாத்திரம் வலுவானது. பொன்னம்பலம் காமெடியான குரூர வில்லன். பழைய தாதா கதையென்றாலும் காட்சியமைப்பின் வித்தியாசம் ஒன்ற செய்கிறது. ஜான் பீட்டர் இசை, சுகுமார் ஒளிப்பதிவு பலம்.

No comments:
Post a Comment