பள்ளிப் பருவத்தில் குறிக்கோள் இல்லாதவர்கள் இளம் பருவத்தில் என்ன ஆவார்கள் என்பதை மையமாக வைத்து, புது வழியில் திரைக்கதை அமைத்து, புதியவர்கள் எடுத்த படம்.கண்டதும் காதல்... உடனே கல்யாணம்... முதலிரவில் முறிகிறது நாயகன் யுவன், நாயகி மதுசந்தாவின் வாழ்க்கை. 'ஆம்பிளை என்றால் ஒரு பெண்ணுக்குச் சுகத்தை கொடுக்கணும்; இல்லேன்னா, சொத்தைக் கொடுக்கணும். இது இரண்டுமே இல்லாத உன்னுடன் வாழ முடியாது' என்று விரட்டி அடிக்கப்படும் யுவன், தன் பள்ளி நண்பர்களைச் சந்திக்கிறான்.
யுவன் சந்திக்கும் தன் இரண்டு நண்பர்களின் நிலையும் இப்படித்தான். சமுதாயம் அவமானப்படுத்தி, உதாசீனப்படுத்துகிறது. பணத்திற்காக, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாகச் சிறு தவறு செய்பவர்கள் அதையே தங்களது தினசரி பணியாகச் செய்யத் தொடங்குகிறார்கள்.
சிறு சிறு தவறுகள் செய்பவர்களுக்குப் பெரிய ஆசை வருகிறது. இதனால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க, ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடுகின்றனர். இதற்குத் தங்களுடன் பள்ளியில் படித்த இரண்டு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு ஐந்து கோடியைக் கொள்ளையடிக்கும் ஐந்து பேரும் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தன்னை உதாசீனப்படுத்திய தன் மனைவியை அவர் வழியிலேயே சென்று பழியும் தீர்த்துக்கொள்கிறார் படத்தின் நாயகன் யுவன். வங்கியில் எப்படி கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடிக்கும் ஐந்து பேரும் யாரால் எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் வீரியம் குறையாமலும் சொல்லுவதே படத்தின் முடிவு. படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் தன் திறமையை நிரூபித்து விடுகிறார்.எதிர்பாராத காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. இயக்குநராகவும் கதாநாயகனாகவும் படத்திற்கு முதுகெலும்பாகவும் விளங்குகிறார் யுவன்.
யுவனின் நண்பர்களாக வரும் செஷாந்த், நித்திஷ்குமார், சபி, பாலா, அனைவரும் அந்த அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பது மட்டும் அல்லாமல் நடிப்பிலும் பிளந்து கட்டியிருக்கிறார்கள்.சபியின் மனைவியாக வரும் தர்ஷா நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பின் அளவில் நிறைவு ஏற்படுத்தி விடுகிறார்.
மதுசர்மாவிடம் 'ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது' என்று 'காதல்' தண்டபாணி சொல்ல, அதற்கு, 'நானும் அதையே தான் சொல்கிறேன். என்னால் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது, அதனால் தான் இவனோடு வாழ என்னால் முடியாது" என்று கூறி, திரையரங்கின் ஒட்டுமொத்த கைத்தட்டலையும் பெற்றுவிடுகிறார் நாயகி மதுசர்மா.
ஒரு காட்சியில் வந்தாலும், உலுக்கி எடுக்கும் மயில்சாமி, இந்தப் படத்தில் ரகளை கட்டியிருக்கிறார். ஸ்ரீபவனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் ஒய்யாரம்.
படத்திற்குத் தமன் ஒரு நாயகன் என்று சொல்லலாம். அந்த அளவிற்குத் தனது அறிமுக இசையில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுகிறார். படத்தின் பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, தனக்கு என்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிக்கிறார்.
புதிய முயற்சிக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் இப்புதியவர்களையும் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் வரவேற்பார்கள்.
No comments:
Post a Comment