பிளாட்பாரத்தில் இட்லி கடை நடத்தும் பரத்தும் நிறைய தொழில் நிறுவனங்களின் முதலாளி ரம்யா கிருஷ்ணன் தம்பி சத்யாவும் சிறு வயது நண்பர்கள். இருவரும் பழகுவது ரம்யா கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. தம்பியை பிரித்து வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புகிறார்.
பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வரும் சத்யா திரும்பவும் பரத்துடன் நட்பை புதுப்பிக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ரம்யாகிருஷ்ணன் நண்பர்களை பிரிக்க மீண்டும் சதி செய்கிறார். அவர் திட்டம் வெல்கிறது. நண்பர்கள் எதிரியாகிறார்கள்.
பரத்தின் நிலத்தை அபகரித்து அவர் தாய் சமாதியை இடிக்கின்றனர். ஆவேசமாகும் பரத் ரம்யாகிருஷ்ணனுடன் மோதலில் இறங்குகிறார். பணத்தையும் புகழையும் அழித்து தெருவுக்கு கொண்டு வருவேன் என சவால் விடுகிறார். அதை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது மீதி கதை....
அழுக்கு உடம்பு கழுத்தில் துண்டு என இட்லி கடைக்காரருக்கு பொருந்துகிறார் பரத். தாய் பாசம், நட்பு, ஆவேசம் என பல முகம் காட்டுகிறார். ஆக்ஷனிலும் ஆக்ரோஷம். நண்பன் குடும்பத்தை தரக்குறைவாக பேசும் ரவுடியை புரட்டி எடுப்பது தங்கையிடம் சில்மிஷம் செய்யும் மந்திரி மகனை நைய புடைப்பது தாய் சமாதியை இடிப்பவர்களை எதிர்ப்பது என அனல் வீசுகிறார். ரம்யாகிருஷ்ணனை வீழ்த்த பாதி விலைக்கு குடியிருப்புகள் கட்டி கொடுப்பது பரபர....
பெரிய நடிகர்களுக்கான கேரக்டரில் துணிந்து இறங்கி ஜெயித்துள்ளார்.
ரம்யாகிருஷ்ணன் இன்னொரு நீலாம்பரியாக கர்ஜிக்கிறார். பார்வையில் முறைப்பு காட்டி அலட்டிக்காமல் நண்பர்களை பிரிக்கும் தந்திரங்கள் குரூரம்.
பிரியாமணி கவர்ச்சி காதலி. இட்லி பார்சல் செய்யும் கருணாசும் அவரை ஏமாற்றும் மயில்சாமியும் சிரிக்க வைக்கின்றனர். சீதாவும் சரண்யா மோகனும் அழகான அம்மா, தங்கையாக வருகிறார்கள். சத்யா நண்பனாக வந்து துரோகியாகி நிற்கிறார். அபிநய், இளவரசு, மகாதேவன் ஆகியோரும் உள்ளனர்.
கதையில் பழமை நெடி வீசினாலும் காட்சிகளில் புதுமை செய்து விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தேவாவின் இசை பெரிய பலம். பாடல்கள் இனிமை. எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவில் பிரமாண்டம்...

No comments:
Post a Comment