Tuesday, May 11, 2010

பொக்கிஷம்

செல்போன், இன்டர்நெட் என தகவல் தொடர்பு வளர்ச்சியான இக்கால காதலையும் கடிதங்களால் வளர்ந்த அக்கால காதலையும் காட்சிபடுத்தி காவியமாய் தந்துள்ளார் இயக்குனர் சேரன்.

கொல்கத்தாவில் கப்பல் என்ஜினீயராக பணியாற்றும் சேரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தந்தையை காண சென்னை வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் நாகூரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பத்மபிரியாவின் தாயும் ஆபரேசனுக்காக சேர்க்கப்படுகிறார். அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் வராத நிலையில் சேரன் பண உதவி செய்கிறார். அவருக்கு நன்றி சொல்கிறார் பத்மபிரியா. அது நட்பாக மலர்கிறது.

கொல்கத்தா திரும்பிய பிறகும் அந்த நட்பு கடிதம் மூலம் தொடர்ந்து காதலாக வளர்கிறது.

கம்யூனிஸ்டுவாதியான தந்தை விஜயகுமாருக்கு காதல் விஷயம் தெரிய சேரனை நாகூருக்கு அழைத்து போய் பெண் கேட்கிறார். பத்மபிரியா தந்தையும் மகளை கட்டித்தர சம்மதிக்கிறார். படிப்பு முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சந்தோஷத்தில் கொல்கத்தா திரும்புகிறார் சேரன். ஆனால் ஒரு மாதத்துக்கு பிறகு பத்மபிரியாவிடம் இருந்து கடிதங்கள் வருவது நின்று போகிறது. பதறி போய் நாகூருக்கு ஓடோடி வருகிறார். அங்கு வீட்டை விற்று விட்டு குடும்பத்தோடு பத்மபிரியா மாயமானது தெரிகிறது. அவர் தந்தை சதி செய்து பிரித்து விட்டதை தோழி மூலம் அறிந்து உடைகிறார்.

ஊரெல்லாம் தேடி அலைந்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. காலச்சக்கரம் சேரனை இன்னொரு பெண்ணுக்கு கணவாக்குகிறது. ஆனாலும் பத்மபிரியாவுக்கு எழுதி அனுப்பப்படாத கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாக்கிறார் சேரன். அவர் மறைவுக்கு பிறகு அக்கடிதங்கள் வளர்ந்து இளைஞனான மகன் கண்களில்படுகிறது. அவற்றை படித்து நெகிழ்ச்சியாகிறான். பத்மபிரியாவுக்கு எழுதி அனுப்பாமல் இருந்த கடிதங்களை அவரிடம் சேர்க்க தேடிப்புறப்படுகிறான். பத்மபிரியாவை கண்டு பிடித்தானா என்பது இதயங்களை பிழியும் கிளைமாக்ஸ்...

கடிதகாலத்து காதல் சந்தோஷங்களையும் வலிகளையும் அற்புதமாக பதிவு செய்துள்ள படம். சேரன் கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். உதவி, நட்பு, காதல், பிரிவு, துக்கம் அனைத்திலும் பல முகம் காட்டி வெளுத்துள்ளார்.

நட்பாக துவங்கும் கடித போக்குவரத்து உங்களை பார்க்க வேண்டும் என்று பத்மபிரியா ஆசைப்படுவதன் மூலம் காதலாக மாறுவது கவிதை. அஞ்சல் பெட்டியே கதி என கிடப்பது. காதலி கடிதத்துக்காக தபால்காரரை எதிர்பார்த்து தவிப்பது. டிரங்கால் போட்டு பலமணி நேரம் காத்து கிடப்பது அக்கால காதல் இம்சைகள்....

இறுதியில் காதல் தோல்வியில் துவண்டு சரியும் சேரன் நெஞ்சமெல்லாம் வியாபிக்கிறார்.

பத்மபிரியா இஸ்லாமிய பெண்ணாக வாழ்கிறார். காதலுக்கும் மதத்துக்கும் இடையில் அவர் படும் அவஸ்தைகள் அழுத்தம்.

முற்பகுதி கடித போக்குவரத்து கதையின் நீளத்தில் கத்தரி போடாதது சலிப்பு.... கிளைமாக்ஸ் “சீன்”களை உயிரோட்டமாக செதுக்கிய விதம் சேரனை வானளாவ உயர்த்துகிறது.

தந்தை விஜயகுமார் கொல்கத்தா நண்பன் இளவரசு மகன் ராஜேஷ் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. பழைய தபால் நிலையங்கள் கடிதங்கள், டைரிகள், தபால் பெட்டிகள் கொல்கத்தாவின் டிரம் வண்டிகள், பஸ்கள் என ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவு அக்காலத்துக்கு அழைத்து செல்கிறது. சபேஷ் முரளி இசையில் பாடல்கள் மனதை வருடும் ரகம்...

கவித்துவமான காதல் “பொக்கிஷம்”

No comments:

Post a Comment