Sunday, May 16, 2010

ஓடிப்போலாமா

கல்லூரி மாணவர் பரிமள். படிப்பு ஏறாமல் ஒன்பது பாடங்களில் அரியர் வைத்து நண்பர்களுடன் தான்தோன்றித்தனமாக சுற்றுகிறார். அவர் கண்ணில் சந்தியா பட காதல்...

பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் வீட்டில் குடியேறி காதல் கணை வீசுகிறார். ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. ஒன்பது அரியர் வைத்திருக்கும் நீ எனக்கு தகுதி இல்லை என்கிறார். இதனால் பரிமள் ராப்பகலாக படித்து அனைத்து பாடங்களிலும் தேறுகிறார்.

ஆனாலும் சந்தியா மனம் மாறவில்லை. தனது தந்தை கோட்டா சீனிவாசுக்கும் மாமா மகாதேவனுக்கும் தீராத பகை. இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்க்க சந்தியா போராடுகிறார். வீட்டை விட்டு ஓடிவிடு. திரும்பி வரும்போது உன்னை யாரும் கட்டிக்கமாட்டார்கள். வேறு வழியின்றி எனக்கு உன் தந்தை திருமணம் செய்து வைப்பார் பிரிந்த குடும்பம் சேர்ந்து விடும் என்று மாமா மகன் ஆலோசனை சொல்ல அதன்படி வீட்டை விட்டு ஓடுகிறார்.

பரிமளும் வேறு விதமாய் காய் நகர்த்த அதே நாளில் வீட்டை விட்டு ஓடுகிறார். இருவரும் காதலித்து ஓடிவிட்டதாக அபார்ட்மென்ட் அல்லோலப்படுகிறது. ஊட்டிக்கு செல்லும் சந்தியாவை பின் தொடர்ந்து செல்லும் பரிமள் அவரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

ஒரே வீட்டில் தங்குகின்னர். சந்தியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை மனம்மாறச் செய்கிறது. இருவரும் ஊருக்கு திரும்புகின்றனர். ஓடிப்போன அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.

இதையடுத்து முறைப்பையனுடன் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது தன் மீதுள்ள காதலில் பரிமள் ஊட்டிக்கு வந்ததும் தன் மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பும் சந்தியாவுக்கு தெரிகிறது. பரிமள் மேல் காதல் கொள்கிறார். இன்னொரு புறம் சந்தியா முறைப்பையனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் நிறுத்தப்படுகின்றனர். காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.

நடிகை சங்கீதாவின் சித்தி மகன் பரிமள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம். துறுதுறு மாணவனாக வரும் அவர் காதல் வயப்பட்டதும் படிப்பில் சீரியஸ் ஆகி அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்வதும் காதல் கை கூடாமல் துவண்டு நிற்பதும் பக்குவப்பட்ட நடிப்பு.

சந்தியாவை மடக்க அவருக்கு தெரியாமல் பின்னால் ஓடிப்போனதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதலிக்காக குளிரில் நடுங்கி டீ கடையில் உறங்கும்போது பரிதாப பட வைக்கிறார்.

ஆரம்பத்தில் பரிமளை உதாசீனம் செய்யும் சந்தியா தனது செருப்பு, பையை பீரோவில் பாதுகாத்து வரும் பரிமள் காதலை உணர்ந்து தடுமாறுவது ஜீவன்.

காதல் தூது போய் தோட்டா சீனிவாசராவிடம் அடிபடும் சுமன் ஷெட்டி சிரிக்க வைக்கிறார். இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றனர். கலகலப்பான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கண்மணி. வீடு, காம்பவுண்ட் என நகரும் நாடகத்தன காட்சிகள் வேகத்தடை போடுகின்றன.

கந்தகோட்டை

காதலித்து திருமணம் செய்த பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து காதலையே வெறுக்கிறார் நகுலன். காதல் ஜோடிகளை பிரித்து சந்தோஷப்படுகிறார். வீட்டை விட்டு ஓடும் காதலர்களை பெற்றோரிடம் பிடித்து கொடுக்கிறார். பூர்ணா இதற்கு நேர்மாறானவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

உறவினர் பையனின் காதலை நிறைவேற்றிவைக்க நாகர்கோவிலில் இருந்து சென்னை வருகிறார். அப்போது பூர்ணாவும் நகுலும் மோதிக்கொள்கிறார்கள். உறவினர் பையன் காதலிப்பது நகுலின் தங்கை என தெரிய அதிர்ச்சி.

நகுலனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வைக்கிறார். வந்த காரியம் முடிந்ததும் ஊருக்கு புறப்படும் பூர்ணாவிடம் நகுல் மனதை பறிகொடுக்கிறார். காதலையும் சொல்லிவிடுகிறார். பூர்ணாவுக்கும் நகுலை பிடிக்கிறது. ஊருக்கு போனதும் அவரும் காதலை வெளிப்படுத்துகிறார்.

உள்ளூர் தாதா சம்பத் மகன் பூர்ணாவை ஒருதலையாக காதலித்து தோல்வியில் தற்கொலை செய்து கொள்கிறான். மகன் சாவுக்கு காரணமான பூர்ணாவை விதவை கோலத்துக்கு மாற்றுகிறார் சம்பத். பூர்ணா தந்தை, தோழியையும் கொலை செய்கிறார்.

காதலியை தேடி வரும் நகுலுக்கு சம்பத் வலையில் பூர்ணா சிக்கிய விஷயம் தெரிய ஆவேசமாகிறார். சம்பத்துடன் மல்லுகட்டுகிறார். ஜெயிப்பது யார் என்பது கிளைமாக்ஸ்.

காதல் ஜோடிகளை பிரிக்கும் நகுல் கலகலப்பாய் தெரிகிறார். பூர்ணாவுடனான மோதலும் சுவாராசியமானவை. நண்பன் சந்தானம் காதலும் அதை முறிக்கும் விவேகமும் தமாஷானவை. பூர்ணா காதல் ஜோடியை சேர்த்து வைக்க பட்டணம் வருவதும் காதலி நகுல் தங்கை என்பதும் திருப்பம்...

வில்லத்தனமான முதல் பாதி கதை சீரியஸ் இல்லாமல் நகருவது காட்சிகளோடு ஒன்ற விடாமல் செய்கிறது. சம்பத் வருகைக்கு பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறுகிறது. மகன் தற்கொலை, பூர்ணா குடும்பத்தினர் சிறை வைப்பு, கொலைகள் என விறுவிறுப்பாக பயணிக்கிறது. சம்பத்தை மூன்று நாளில் வீழ்த்துவதாக சபதம் செய்து போலீசிடம் சிக்க வைத்து படிப்படியாக பலமிழக்க வைத்து கதையை முடிக்கும் நகுல் அதிரடி பரபரக்க வைக்கிறது.

பூர்ணா துறு துறு பெண்ணாக அழகு காட்டுகிறார். கொலைகார சம்பத்திடம் சிக்கி பதறுவதில் அழுத்தமான நடிப்பை பிழிகிறார். சந்தானம் சிரிக்க வைக்கிறார்.

காதல், கலகலப்பு, ஆக்ஷன் எனவிறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சக்திவேல். தினா வின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

வேட்டைக்காரன்

ரவுடிகளை வேட்டையாடும் கல்லூரி மாணவன் கதை...

தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.

தன்னுடன் படிக்கும் மாணவியை சிட்டியை கலக்கும் ரவுடி செல்லா படுக்கைக்கு அழைக்க அவன் கோட்டையிலேயே புகுந்து நொறுக்குகிறார்.

செல்லாவின் தந்தை தாதா வேதநாயகமும் அவன் கூட்டாளிகளான குட்டி தாதாக்களும் விஜய்யை அழிக்க கை கோர்க்கிறார்கள். அதன் பிறகு ஆக்ஷன் சூடு. வயதானவர் மேல் காரை ஏற்றும் போலீஸ்காரரை விரட்டி பிடித்து தண்டிப்பதில் இருந்து விஜய்யின் ஹீரோயிசம் ஆரம்பமாகிறது.

ரெயில் நிலையத்தில் பாட்டியை வழியனுப்ப வரும் அனுஷ்கா மேல் காதல் வயப்பட்டு திருமணம், குழந்தைகள் பெற்று பெயர் சூட்டுதல் என கனவில் சஞ்சரிப்பது... தமாஷான ஆட்டோக்கார வேலை... அனுஷ்கா பாட்டியை வசியப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து செய்யும் காதல் குறும்புகள் என கலகலப்பு செய்கிறார்.

செல்லாவை பகைத்ததும் ஆக்ஷனுக்கு திரும்புகிறது. அவன் கேம்புக்குள் புகுந்து பெண்களை படுக்கைக்கு கூப்பிடுவியா என குமுறி எடுப்பது அதிரடி...

மகன் தாக்கப்பட்டதும் ஆவேசமாக அறிமுகமாகும் தாதா தேவராஜ் ஏதோ செய்யபோகிறார் என்று பார்த்தால் விஜய்யை காரில் அழைத்து போய் தனது சமூக விரோத காரியங்களை சுற்றி காட்டி விட்டு அனுப்பி வைப்பது வேகத்தடை...

செல்லாவை தண்ணீருக்குள் சமாதியாக்குவது... வேதநாயகத்தை மந்திரியாக்க விடாமல் தடுப்பது பரபர சீன்கள்.

அனுஷ்கா அழகான காதலியாய் வருகிறார். போலீஸ் அதிகாரி தேவராஜாக வரும் ஸ்ரீஹரி மிடுக்கு காட்டுகிறார். நீண்ட தலைமுடி உருட்டும் கண்களுடன் வில்லன் செல்லாவாக நடுங்க வைக்கிறார் ரவி ஷங்கர். அமைதியான வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார். சலீம் கவுஸ், கெட்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் சாயாஜி ஷிண்டே.

சத்யன், மனோபாலா சிரிக்க வைக்கின்றனர். சத்யன் கொடூரமாக கொல்லப்படுவது பரிதாபம். விஜய் மகன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் துள்ளாட்டம். கோபிநாத் ஒளிப்பதிவில் பிரமாண்டம். காட்சி அமைப்பில் விறுவிறுப்பாக கூர்தீட்டியுள்ளார் இயக்குனர் பாபுசிவன். கதையோட்டத்தில் ஜீவன் இல்லை.

எதுவும் நடக்கும்

நடிப்பு வெறியில் சைக்கோ ஆகும் இளைஞன் கதை.

திரையுலகில் பெரிய நடிகராகும் லட்சிய கனவில் வாழ்பவர் கார்த்திக்குமார். கோடீஸ்வரர் வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். மனைவி இழிவாக பேசி அடிக்கடி சண்டை போடுகிறாள். அவளால் நாடக வாய்ப்புகளும் பறிபோகிறது.

கோடீஸ்வரர் பேத்தி அபர்ணாநாயர் அமெரிக்காவில் இருந்து வருகிறார். தாத்தா வெளியூர் போய்விட்டதால் வீட்டில் தனியாக இருக்கும் அவரை உபசரித்து உதவிகள் செய்கிறார். கார்த்திக்குமார் நடிப்பு ஆர்வம் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள பிரியப்படுகிறார். அவமரியாதை செய்யும் கார்த்திக்குமாரின் மனைவி வேடத்தில் அபர்ணா நடிக்க ஒப்புக்கொள்கிறார். அங்குதான் பயங்கரம் ஆரம்பமாகிறது.

கார்த்திக்குமார் நடிப்பு சைக்கோத்தனமாக மாறுகிறது. அபர்ணாவை நிஜமான மனைவி என பாவித்து அவரை பழிதீர்க்க துடிக்கிறார். கட்டிப்போட்டு துன்புறுத்துகிறார். கேஸ் சிலிண்டரை திறந்து கொளுத்தவும் முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அபர்ணா.

முதல் மனைவியை கொன்று பிணத்தை மறைத்து வைத்திருப்பதை கண்டு அலறுகிறார். அபர்ணா கதி என்ன என்பது கிளைமாக்ஸ்.

வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் ரொஸாரியோ- மகேஸ்வரன். கோடீஸ்வரர் பேத்தியுடன் கார்த்திக்குமார் அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். அபர்ணாநாயர் வீட்டுக்குள் உயிர் பிழைக்க போராடுவது திக்... திக்... கிளைமாக்ஸ் பயங்கரம் சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

பெர்னார்ட் ஒளிப்பதிவு, ராஜின் இசையும் பலம். வீட்டுக்குள்ளேயே காட்சிகள் முடங்குவதை தவிர்த்திருந்தால் இன்னும் பயமுறுத்தி இருக்கும்.

ரேணிகுண்டா

இளம் குற்றவாளிகள் கதை...

பாசமான தாய், தந்தையின் ஒரே மகன் பத்தொன்பது வயது சக்தி. என்ஜினீயருக்கு படிக்க வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். சக்தியோ படிப்பு ஏறாமல் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்கிறான். உள்ளூர் தாதா செய்யும் கொலையை நேரில் பார்க்கும் தந்தை அவனுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்ல தயாராகிறார். ஆத்திரப்படும் தாதா சக்தி தாய், தந்தையை கார் ஏற்றி கொல்கிறான். சக்தியையும் சிறைக்கு அனுப்புகிறான்.

அங்கு இளம் குற்றவாளிகள் பாண்டி, டப்பா, மாரி, மைக்கேல் பழக்கமாகிறார்கள். சக்திக்கு உதவ தயாராகின்றனர். ஐவரும் சிறையில் இருந்து தப்பி ரவுடியை கொல்கின்றனர். பின்னர் மும்பைக்கு தப்பி செல்கின்றனர். சக்தியையும் அழைத்து போகிறார்கள். டிக்கெட் எடுக்காததால் ரேணிகுண்டாவில் இறங்குகின்றனர். அங்கு ஜெயில் கூட்டாளி சங்கர் அறிமுகமாகிறார். அவன் உதவியோடு தங்கி கூலிக்கு கொலை செய்கின்றனர்.

பக்கத்து தெருவில் வசிக்கும் வாய் பேசாத சனுஷாவுக்கும் சக்திக்கும் காதல் மலர்கிறது. ஐந்து பேரையும் தீர்த்துக்கட்ட தமிழக என்கவுண்டர் போலீஸ்படை ரேணிகுண்டா வருகிறது. ஐவரும் தப்பினார்களா? காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்...

சக்தியாக வரும் ஜானி. கேரக்டராகவே மாறியுள்ளார். தாய், தந்தை நடுரோட்டில் சாகடிக்கப்படுவதை நேரில் பார்த்து கதறுவது... அடித்து நிர்வாணமாக தூக்கி எறியும்போது அலறுவது... என அனுதாபத்தை அள்ளுகிறார். தாய், தந்தையை கொன்றவனை ஆவேசமாக குத்தி சாகடிப்பதில் வெறி, கிளைமாக்சில் நண்பன் சாவுக்கு காரணமானவர்களை “ஏன்டா வண்டிய நிறுத்தல” என பேசிக்கொண்டே அடித்தும் கடித்தும் பிணமாக்கி தூக்கி எறிந்து தேர்ந்த ஆக்ஷனை வெளிப்படுத்துகிறார்.

போலீசை நக்கல் செய்யும் தீப்பெட்டி கணேசன் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். “ஐயே இவருக்கா பயந்தே” ஏட்டு... போ போயிட்டே இரு என மிரட்டுவது... காதல் வயப்பட்டு தலை சீவி தெரு தெருவாய் ஸ்டைல் காட்டுவது... காதல் தோல்வியில் சோகபாட்டு கேட்டு வருத்தம் காட்டுவது என முழுக்க சிரிப்பு தோரணம் கட்டுகிறார். கோஷ்டி தலைவனாக வரும் நிஷாந்த், தமிழ், சந்தீப் பாத்திரங்களும் அழுத்தமாக செதுக்கப்பட்டுள்ளன.

ஜானி, சனுஷா காதல் கவிதை... சனுஷா முறைப்பதும் அவரை பார்த்து ஜானி ஓட இவரும் வேறு தெரு வழியாக வந்து எதிரே நிற்பதும் சாரல் மழை ரகம்...

கணவனால் விபசாரத்துக்கு அனுப்பப்பட்டு தங்கைக்கு தனது நிலை வரக்கூடாது என புழுங்கி ஜானியுடன் அனுப்பும் அக்கா கேரக்டரில் வாழ்கிறார் சஞ்சனா சிங். கிளைமாக்ஸ் திகிலூட்டுகிறது. புது களத்தில் விறு விறுப்பாக கதையை நகர்த்தி முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் டைரக்டர் பன்னீர்செல்வம்.

சிறுவர்களால் இவ்வளவு பயங்கர கொலைகள் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் காட்சி அமைப்புகள் தரமான படம் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. கணேஷ் ராகவேந்திரா இசையும், ரேணிகுண்டா தெருக்களில் ஓடி சாடியுள்ள சக்தியின் ஒளிப்பதிவும் கை குலுக்க தகுதியானவை.

நான் அவனில்லை -2

பெண்களை ஏமாற்றி மணந்து கொள்ளையடித்து கம்பி நீட்டும் நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகம்.

ஜீவனே நாயகன். வெளிநாட்டில் ஏமாற்றும் கதை...

கணவனாக வருபவன் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஹேமமாலினி. அவரை பின் தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி வீழ்த்துகிறார் ஜீவன். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது ஹேமமாலினி கழுத்தில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த ரொக்கப் பணத்தை சுருட்டி மாயமாகிறார்.

சினிமாவில் நடிக்கும் லட்சுமி ராய் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்க ஆர்வப்படுகிறார். அது தெரிந்து பெரிய தொழில் அதிபர் என்றும் அவரது தீவிர ரசிகர் என்றும் அறிமுகமாகிறார். பிறருடைய வீட்டையும் நிலத்தையும் தன்னுடையது என நம்ப வைத்து காதல் வலையில் சிக்கவைக்கிறார். தந்திரமாய் பேசி அவரிடம் இருந்து பல கோடிகளை கறந்து விட்டு மறைகிறார்.

மாடல் அழகி ஸ்வேதாமேனன் திருமணமான ஆண்களுக்கு வலை விரித்து பணத்தை கறப்பதுடன் அவர்களின் மனைவிமார்களிடமும் மாட்டி விடுகிறார். அவரிடமும் கோடீஸ்வரன் என சொல்லி வசியப்படுத்துகிறார். வீட்டில் புகுந்து நகை பணத்தை அள்ளி நழுவுகிறார்.

வெளிநாட்டு பெண் தாதா ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி என்ற பெயரில் பழகி வாலியின் தத்துவ கவிதைகளை தான் எழுதியதாக சொல்லி ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவன் போதனைகளில் மயங்கி அவர் பக்தையாக மாறுகிறார். தன்னிடம் இருந்து பணத்தையும் வழங்குகிறார். அந்த பணத்தை ஜீவன் என்ன செய்கிறார் என்பது சென்டிமெண்ட் கிளைமாக்ஸ்...

அப்பாவி வில்லத்தனத்தில் ஆரவாரப்படுத்தியுள்ளார் ஜீவன். கனிவான பேச்சு, புத்திசாலித்தன செய்கைகளால் பெண்களை வசிப்படுத்தும் சீன்கள் ரசனையானவை.

ஹேமமாலினியை மடக்க உங்கள் முகம் பார்த்து போனால் சம்பள உயர்வு, பதவி உயர்வெல்லாம் கிடைக்கிறது என்பதும் அவர் சொன்ன இடத்தில் விடிய விடிய உட்கார்ந்து இருப்பதும் ரகளை.

ஸ்வேதா மேனனை அலட்சியபடுத்துவதுபோல் விழவைத்து பணப்பெட்டியை வழித்தெடுத்து, மாயமாவது... லட்சுமிராயிடம் வேறொருவர் நிலத்தை காட்டி இங்கு உங்கள் பெயரில் ஸ்டூடியோ கட்டப்போகிறேன் என்று கூலாக சொல்வது... என உலக மகா மோசடித்தனத்தில் ஜொலிக்கிறார். கொள்ளைக்காரியாக வரும் ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி பாடல் வரிகளை மொழி பெயர்த்து சொல்லி சன்னியாசியாக மாற்றி சொத்துக்களை அபகரிப்பது வயிற்றை புண்ணாக்கும் காமெடி..

ஊனமுற்ற சங்கீதாவுக்கு உதவுவதன் மூலம் மனதில் இறங்குகிறார். இலங்கை பிரச்சினையோடு சங்கீதா கேரக்டரை இணைத்து இருப்பதும் பிரிந்த குழந்தையை அவரோடு சேர்த்து வைக்க ஜீவன் போராடுவதும் ஜீவன்... மற்ற நாயகிகளிடம் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

பெரிய நடிகை லட்சுமிராய் சுலபமாக ஏமாறுவது சினிமாத்தனம். வித்தியாசமான கதை களத்தில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் செல்வா.

மத்திய சென்னை

குப்பத்து ஜனங்கள் நலனுக்காக போராடும் இளைஞன் கதை...

குடிசைப்பகுதியில் வசிக்கும் ஜெய்வந்துக்கு சினிமா டைரக்டராக லட்சியம். கம்பெனிகள் படியேறி வாய்ப்பு தேடுகிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சேரி மக்களை ஏமாற்றி தஸ்தாவேஜூகள் தயாரித்து அந்த இடத்தை அபகரிக்க முயல்கிறார் மகாதேவன். ஜெய்வந்த் அவரை எதிர்க்கிறார். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் பத்து கோடி ரூபாய் தந்து நிலத்தை மீட்பதாக சவால் விடுகிறார். பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று தவிக்கும்போது மகாதேவன் மகள் ரம்யா பர்ணா படம் டைரக்டு செய்யும்படி ஆலோசனை சொல்கிறார். அப்படத்தை தானே தயாரிப்பதாக பணமும் கொடுக்கிறார். படத்தை முடித்ததும் ரிலீஸ் செய்யவிடாமல் மகாதேவன் தடுக்கிறார். எதிர்ப்பை முறியடித்து படத்தை வெளியிட்டாரா? என்பது கிளைமாக்ஸ்...

லட்சியத்துக்காக போராடும் இளைஞன் கேரக்டரில் பிரகாசிக்கிறார் ஜெய்வந்த். தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கியதும் சேரி மக்களுக்கு சேலை, பாத்திரங்கள் என பொருட்களை வாங்கி குவித்து ஹீரோயிசம் செய்கிறார். குடிசைகளை இடிக்கும் வில்லன் கூட்டத்தோடு மோதி ஆக்ஷனில் வேகம் காட்டுகிறார்.

வில்லன் மகளுடன் மோதல் வந்து காதல் மலர்வது பழைய பார்முலா. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும்போது குப்பத்து மக்கள் நகை பணம் வசூலித்து கொடுத்து ஜெய்வந்துக்கு உதவுவது சென்டிமென்ட். படம் ரிலீசாகுமா? ஆகாதா? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பில் கிளைமாக்ஸ் சீன்கள் நகர்கின்றன.

குப்பத்தை மீட்க பத்து கோடி தருவதாக சவால் விடுவதும் அதற்காக உழைப்பதும் ஒட்டவில்லை. வில்லன் மகளாக வரும் ரம்யா பர்ணா காதலனுக்கு உதவி விட்டு பரிதாபமாக மடிந்து போகிறார். மகாதேவன் பாசம் காட்டி மோசம் செய்யும் வில்லங்கமான வில்லன். பிரகாஷ்ராஜ் டைரக்டர் வேடத்தில் கம்பீரம். கஞ்சா கருப்பு, சார்லி சிரிக்க வைக்கின்றனர்.

சினிமா விஷயங்களையும் சேரி மக்கள் யதார்த்த வாழ்வையும் இணைத்து கலகலப்பாக கதையை நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் விவேகானந்த்- வீரசிங்கம். இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை.


பழசிராஜா

கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம்.

இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.

பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.

இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.

எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.

எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.

மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.

இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.

அதே நேரம் அதே இடம்

காதலித்து ஏமாற்றிய பெண்ணை பழி வாங்கும் இளைஞன் கதை...

நிழல்கள் ரவி மகன் ஜெய். படித்து வேலையின்றி சுற்றுகிறார். அவருக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் மலர்கிறது. தந்தைக்கு இவ்விஷயம் தெரிய வேலை செய்து சம்பாதித்து விட்டு திருமணம் செய்து கொள் என்கிறார். அவர் அறிவுரைப்படி ஆஸ்திரேலியாவில் கிடைத்த வேலையில் சேரப்போகிறார். ஒருவருடம் பிரிந்திருப்பது என்று காதலர்கள் முடிவு செய்கின்றனர்.

கைநிறைய சம்பாதித்து நாடு திரும்பும்போது ஜெய்க்கு அதிர்ச்சி. விஜயலட்சுமி பணக்கார மாப்பிள்ளை ராகுலை மணந்து குடித்தனம் நடத்துகிறார். விஜயலட்சுமியிடம் ஆவேசப்படுகிறார். ஆனால் அவரோ பணம் தான் முக்கியம் என்று சொல்லி ஜெய்யை உதாசீனம் செய்கிறார்.

உன்னை ஏமாற்றிய அவளை பழிவாங்கு என்று நண்பன் வெறியேற்றுகிறான். அதன்படி விஜயலட்சுமிக்கு தொல்லை கொடுக்கிறார். அதிலிருந்து தப்ப ஒருநாள் என்னை அனுபவித்துக் கொள் என்கிறார் விஜயலட்சுமி. ஜெய் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

ஜெய்-விஜயலட்சுமி காதல் வயப்படும் சீன்கள் கலகலப்பு. தோல்வியில் ஜெய் சோகம் காட்டுகிறார். விஜயலட்சுமி கணவனே ஜெய்க்கு நண்பனாக இருப்பதும், விஜயலட்சுமியை பழிவாங்க அவன் தூண்டுவதும் திருப்பங்கள். காதலித்து ஏமாற்றும் பெண்கள் மேல் வெறுப்பு காட்டும் ராகுல் தனது மனைவியின் கடந்த வாழ்வு தெரிந்தால் என்ன செய்வாரோ என்று பதட்டப்பட வைக்கிறார். விஜயலட்சுமியை ஜெய் பழி தீர்க்கும் கிளைமாக்ஸ் பரபரக்க வைக்கிறது. விஜயலட்சுமி காதலும், கவர்ச்சியும் காட்டுகிறார்.ஜீவா கோஷ்டி காமெடி ரகளை. பவன் சேகர் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையில் பாடல்கள் இனிமை.

காதல் கிரைம் கதையை இளமையாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் பிரபு.எம். திரைக்கதையை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பழி தீர்த்தல் காதல் புனிதத்தை அடிபட செய்கிறது.

சா... பூ.. த்ரி

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் கதை...

கல்லூரி மாணவர் அர்ஷத்கான். இவர் மூப்பது வயதை தாண்டிய ஆண்டிரக பெண்களை சுற்றுகிறார். ஒரு பெண் மேல் ஆதீத காதல் வயப்பட அப்பெண்ணோ ஜிம் நடத்தும் வாலிபருடன் ஓடுகிறார். இதனால் வெறுப்பாகி நிற்கிறார்.

இன்னொரு இளைஞனான பிரஜின் திருமணமானவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை. மனைவியும் வேலை பார்க்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பட்டும் படாமல் வாழ்கின்றனர். மனைவி செல்போன் நம்பரில் ஒருவன் கிராஸ் ஆகிறான். அவனுக்கு இரவு பகலாய் மெசேஸ் அனுப்பி ஈர்ப்பாகிறாள் அதுபோல் பிரஜினுக்கும் செல்போன் தோழி கிடைக்கிறாள்.

மூன்றாவதாக அக்ஷய் பல வருடங்களாய் சுற்றி ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருக்கு மிதுனாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். முதலில் மறுக்கும் அக்ஷய் பிறகு காதலியை உதறி மிதுனா பின்னால் சுற்றுகிறார். மூவரும் என்ன ஆகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

அர்ஷத்கானின் வயதான பெண்கள் மீது வரும் காதல் சீன்கள் கலகலப்பானவை. சில இடங்களில் “ஏ”வகையை தாண்டி முகம் சுளிக்க வைக்கிறது. தோழியின் பிறந்த நாள் பார்ட்டியில் பாட்டு பாடி கூட்டத்தினரை வெறுப்பேற்றுவது சிரிப்பு... தன்னை விரும்பும் பெண்ணோடு கடைசியில் சேர்ந்து சுபமாக்குகிறார்.

அக்ஷய் காதலித்தவளை விட்டு பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நெருக்கமாகும் சீன்கள் அழுத்தமானவை. பிரஜின் திருமண வாழ்க்கை கால்சென்டர் இறுக்கங்களை பிரதிபலிக்கிறது. இருவரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாமல் செல்போன் நண்பர்களுடன் ஜொள்ளு விடுவது தமாஷ்.

இரட்டை அர்த்த வசனங்கள், சிகரெட் பெண்கள், மதுவாடை என நிறைய அன்னியத்தனம். காட்சிகளை புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இளமைத்தனமாக நகர்த்துகிறார் இயக்குனர் அர்ஷத்கான். மிதுனா, சாரா கேரக்டரில் ஒன்றியுள்ளனர். அக்ஷயா, உஜ்ஜியினி, பிங்கி, ரிஷ்வந்த் ஆகியோரும் உள்ளனர்.

அப்பாஸ் இசையும் சஞ்சய் ஒளிப்பதிவும் பலம்.

கண்டேன் காதலை

தொழில் அதிபர் மகன் பரத் காதலில் தோற்று விரக்தியாகிறார். சொத்து சுகங்களை ஒதுக்கிவிட்டு கால் போன போக்கில் போகிறார். மதுரை செல்லும் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறுகிறார். அதே ரெயிலில் பயணம் செய்யும் தமன்னா எதையும் சீரியசாக எடுக்காத வளவள வாயாடி. பரத்துக்கு அவர் உதவுகிறார். பரத்தும் ரவுடிகளிடம் சிக்கும் தமன்னாவை காப்பாற்றி கைமாறு செய்கிறார்.

இருவரும் நட்பாகிறார்கள். ரெயிலை தவறவிடும் தமன்னாவை தேனியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விடுகிறார். பயணத்தில் தமன்னாவால் கவலைகளை விட்டு புத்துணர்ச்சி பெறுகிறார். தமன்னாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர் தன்னுடன் படித்த கவுதமை ஏற்கனவே காதலிப்பதால் வீட்டை விட்டு ஓடுகிறார். பரத்தும் தமன்னாவுடன் சென்று காதலன் வசிக்கும் ஊட்டியில் கொண்டு விட்டு விட்டு பிரிவு வலியோடு சென்னை திரும்புகிறார்.

தமன்னாவின் வாழ்வியல் மந்திரங்களை மனதில் பதித்து நஷ்டமான பிசினசை தூக்கி நிறுத்துகிறார்.

தமன்னாவை காணாத பெற்றோர் ஒன்பது மாதத்துக்கு பிறகு பரத்தை தேடி பிடித்து கேட்கின்றனர். தமன்னாவை அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்து ஊட்டிக்கு செல்கிறார். அங்கு காதலனால் ஏமாற்றப்பட்டு சந்தோஷங்களை தொலைத்து நிற்கும் தமன்னாவை பார்க்கிறார். கவுதமிடம் பேசி இருவரையும் சேர்த்து வைத்து தேனிக்கு அழைத்து வருகிறார். தமன்னா குடும்பத்தினரோ பரத்துக்கும் தமன்னாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். தமன்னா யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

அழுத்தமான காதலை வித்தியாசமான காட்சியமைப்பில் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
கோட், சூட்டில் இளம் தொழில் அதிபர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பரத்.காதலி இன்னொரு வரை மணந்ததும் நொறுங்கி சோகமாகுகிறார். தமன்னாவின் கள்ளமில்லா வெள்ளை சேட்டைகளில் ஈர்ப்பாகி மீண்டு வருவது நச்...

ஊட்டியில் காதல் தோற்று துவண்டு நிற்கும் தமன்னாவிடம் நான் அழுதுட்டு இருந்தப்போ நீ சிரிச்சிட்டு இருந்தே. நான் சிரிக்கும் போது நீ அழுதுக்கிட்டு இருக்கே என்று சொல்லி கண் கலங்கும் போது அழ வைக்கிறார்.

தன்னை மாப்பிள்ளையாக்கி திருமண வேலைகளில் ஈடுபடும் தமன்னா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பதும் அது நிஜமாகட்டும் என்ற சந்தோஷ உணர்வையும் ஒரு நேரத்தில் வெளிபடுத்துவது சபாஷ்.

நான் தேனி பொண்ணு என்று பட பட வென பொரியும் அஞ்சலி கேரக்டரில் வாழ்கிறார் தமன்னா. ரெயில் நிலையத்தில் இரண்டு ரூபாய்க்காக கடைக்காரனிடம் சண்டையிட்டு ரெயிலை தவறவிடுவது... முறைமாப்பிள்ளையை கட்டிக்க மறுத்து ஓடுவது துறுதுறு. காதலன் கைகழுவும் போது பரிதாபபட வைக்கிறார்.

தமன்னா தாய் மாமனாக வரும் சந்தானம் காமெடியில் வெளுக்கிறார். வித்யாசாகரின் பின்னணி இசை: பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் அழகூட்டுகிறது. முன்னா கேரக்டரும் வலிமை.

கணவனை விட்டு ஆடிட்டருடன் ஓடிய தாயின் காதலை நியாயப்படுத்தும் சீன்கள் கலாசார பிழை. கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பும் துறு துறுப்புமாய் நிமிர வைக்கிறது.

ஆதவன்

கொலை கும்பலிடம் இருந்து நீதிபதி தந்தையை காப்பாற்ற போராடும் ரவுடி இளைஞன் கதை...

கொல்கத்தாவில் குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகளை கடத்துகிறது ஒரு கும்பல். அந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியத்தின் ஒரு நபர் கமிஷன் விசாரிக்கிறது. அவரை தீர்த்துகட்ட எதிரிகள் திட்டமிடுகின்றனர். பணத்துக்கு கொலைகள் செய்யும் ஆதவனிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

ஆதவன் நீதிபதியை சுடும்போது குறி தவறுகிறது. போலீஸ் உஷாராகி நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கின்றனர். இதனால் சமையல்காரனாக நீதிபதி வீட்டுக்குள் நுழைகிறான். அங்குள்ள பெண்கள், குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. நீதிபதி தங்கை மகள் தாரா அவன் மேல் காதல் வயப்படுகிறாள். காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை.

வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

அப்போது சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன நீதிபதி மகன் நான் தான் என பிரகடனப்படுத்தி தந்தையை காப்பாற்ற அதிரடியாய் இறங்குகிறான் ஆதவன். அதில் வென்றானா என்பது கிளைமாக்ஸ்...

ஆதவனாக வரும் சூர்யா எதிரிகளை கொத்து கொத்தாய் சுட்டுத்தள்ளியும் இடியாய் தாக்கியும் ஆக்ஷனின் சிகரம் தொடுகிறார். சாமியாரை தண்ணீருக்குள் இருந்து போட்டுத் தள்ளுவது பரபர...

வடிவேலுவை கைப்பாவையாய் வைத்து நீதிபதியை கொல்ல திட்டங்கள் வகுப்பதும் அதிலிருந்து அவர் தப்புவதும் சுவாரஸ்யம். பிளாஷ்பேக்கில் பத்து வயது சிறுவனாக வந்து பிரமிக்க வைக்கிறார். கிளைமாக்சில் ஹெலிகாப்டரில் தொங்கி எதிரிகளுடன் மோதுவது ஹாலிவுட் ரகம்.

நயன்தாரா அழகான காதலி. நடிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் வந்து போகிறார். சரோஜாதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு மறு பிரவேசம் எடுத்துள்ளார். அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா, பாடலில் பழைய நினைவுக்கு இழுக்கிறார்.

வடிவேலு காமெடி பலம். வேன் அடியில் குண்டு இருப்பதை தெரிந்து வைத்துள்ள அவரை கட்டாயப்படுத்தி அதே வேனில் ஏற்றியதும் உயிருக்கு பயந்து செய்யும் அலப்பறைகள் வயிற்றை புண்ணாக்குகிறது. கிட்டாருடன் நயன்தாராவை சுற்றும் ரமேஷ்கண்ணா சிரிப்பூட்டுகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், கே.எஸ். ரவிக்குமார் இருவரும் நீதிபதி வீட்டில் வேலைக்காரர்களாக ஆஜராகும் கடைசி காட்சி தமாஷ். ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், காமெடியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

ராகுல்தேவ், சாயாஷி ஷிண்டே வில்லனத்தில் மிரட்டுகின்றனர். நீதிபதியாக வரும் ரவி, அலெக்ஸ், சத்யன், மனோபாலா, ஈரோடு சவுந்தர் கேரக்டர்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹிசிலி பிசிலியே, ஏனோ ஏனோ பனித்துளி பாடல்கள் இனிமை. கணேஷ் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

கொலை கும்பலிடம் இருந்து நீதிபதி தந்தையை காப்பாற்ற போராடும் ரவுடி இளைஞன் கதை...

கொல்கத்தாவில் குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகளை கடத்துகிறது ஒரு கும்பல். அந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியத்தின் ஒரு நபர் கமிஷன் விசாரிக்கிறது. அவரை தீர்த்துகட்ட எதிரிகள் திட்டமிடுகின்றனர். பணத்துக்கு கொலைகள் செய்யும் ஆதவனிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

ஆதவன் நீதிபதியை சுடும்போது குறி தவறுகிறது. போலீஸ் உஷாராகி நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கின்றனர். இதனால் சமையல்காரனாக நீதிபதி வீட்டுக்குள் நுழைகிறான். அங்குள்ள பெண்கள், குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. நீதிபதி தங்கை மகள் தாரா அவன் மேல் காதல் வயப்படுகிறாள். காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை.

வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

அப்போது சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன நீதிபதி மகன் நான் தான் என பிரகடனப்படுத்தி தந்தையை காப்பாற்ற அதிரடியாய் இறங்குகிறான் ஆதவன். அதில் வென்றானா என்பது கிளைமாக்ஸ்...

ஆதவனாக வரும் சூர்யா எதிரிகளை கொத்து கொத்தாய் சுட்டுத்தள்ளியும் இடியாய் தாக்கியும் ஆக்ஷனின் சிகரம் தொடுகிறார். சாமியாரை தண்ணீருக்குள் இருந்து போட்டுத் தள்ளுவது பரபர...

வடிவேலுவை கைப்பாவையாய் வைத்து நீதிபதியை கொல்ல திட்டங்கள் வகுப்பதும் அதிலிருந்து அவர் தப்புவதும் சுவாரஸ்யம். பிளாஷ்பேக்கில் பத்து வயது சிறுவனாக வந்து பிரமிக்க வைக்கிறார். கிளைமாக்சில் ஹெலிகாப்டரில் தொங்கி எதிரிகளுடன் மோதுவது ஹாலிவுட் ரகம்.

நயன்தாரா அழகான காதலி. நடிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் வந்து போகிறார். சரோஜாதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு மறு பிரவேசம் எடுத்துள்ளார். அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா, பாடலில் பழைய நினைவுக்கு இழுக்கிறார்.

வடிவேலு காமெடி பலம். வேன் அடியில் குண்டு இருப்பதை தெரிந்து வைத்துள்ள அவரை கட்டாயப்படுத்தி அதே வேனில் ஏற்றியதும் உயிருக்கு பயந்து செய்யும் அலப்பறைகள் வயிற்றை புண்ணாக்குகிறது. கிட்டாருடன் நயன்தாராவை சுற்றும் ரமேஷ்கண்ணா சிரிப்பூட்டுகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், கே.எஸ். ரவிக்குமார் இருவரும் நீதிபதி வீட்டில் வேலைக்காரர்களாக ஆஜராகும் கடைசி காட்சி தமாஷ். ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், காமெடியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

ராகுல்தேவ், சாயாஷி ஷிண்டே வில்லனத்தில் மிரட்டுகின்றனர். நீதிபதியாக வரும் ரவி, அலெக்ஸ், சத்யன், மனோபாலா, ஈரோடு சவுந்தர் கேரக்டர்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹிசிலி பிசிலியே, ஏனோ ஏனோ பனித்துளி பாடல்கள் இனிமை. கணேஷ் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

ஜகன் மோகினி

ஜெயமாலினி நடிப்பில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வந்த ஜகன் மோகினியின் ரீமேக்கே இப்படம்.

பச்சை மலைத்தீவு மன்னன் நரசிம்மராஜூவின் ஒரே மகன் ராஜா. பட்டத்து இளவரசர். குருகுல வாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்புகிறார். வழியில் கொள்ளையர்கள் நடமாட்டம் பற்றி கேள்விப்பட்டு அவர்களை பிடிக்கமாறு வேடத்தில் சங்கு மலைத்தீவுக்கு வருகிறார். அந்த தீவின் இளவரசன் ரியாஸ்கானே அலைக்கள்ளன் பெயரில் கொள்ளைகள் புரிவது தெரிகிறது. அவரோடு மோதி கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

அப்போது தீவில் வசிக்கும் நமீதா அழகில் மயங்குகிறார். இளவரசன் என்பதை மறைத்து நமீதாவிடம் பழகி காதல் புரிகிறார். ஊருக்கு போய் பெற்றோர் சம்மதம் வாங்கி திரும்பி வந்து மணப்பதாக வாக்குறுதி கொடுத்து நாட்டுக்கு திரும்புகிறார். அங்கு மாமன் மகள் நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ராஜாவோ காதலி நமீதாவையே மணப்பேன் என பிடிவாதம் செய்கிறார். மன்னன் நரசிம்மராஜூ காதலை ஏற்பது போல் நடித்து தந்திரமாக ஆட்களை ஏவி நமீதாவை கொலை செய்து விடுகிறார். நமீதா இன்னொருவருடன் நாட்டை விட்டு ஓடி விட்டதாக ராஜாவை நம்ப வைக்கின்றனர்.

பிறகு ராஜாவுக்கும் நிலாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அதை தடுக்க நமீதா மோகினி பேயாய் நாட்டுக்குள் வருகிறார். இன்னொரு புறம் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ் இளவரசன் ராஜாவை அம்மனுக்கு பலியிட்டு உலகை ஆளும் சக்தி பெற அந்நாட்டுக்கு வருகிறார்.

மோகினியிடமும் மந்திரவாதியிடமும் சிக்குண்டு மன்னர் குடும்பம் படும் அவஸ்தைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதும் கிளைமாக்ஸ்...

மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்துகிறது படம். கடலில் இருந்து பனை உயரத்துக்கு தண்ணீர் உருவாக எழுந்து நாட்டுக்குள் நடந்து வரும் மோகினி உருவம்... மரம் கைநீட்டி ஆட்களை பிடித்து கொல்லுவது... மெத்தையில் பறக்கும் இளவரசன்... அந்தரத்தில் பறக்கும் மனிதர்கள் என மாயா ஜால வித்தைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் என்.கே. விஸ்வநாதன்.

நமீதா மோகினி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி கவர்ச்சியை அள்ளி இறைக்கிறார். இளவரசன் மேல் காதல் வயப்பட்டு நீருக்குள் அநியாயமாக கொல்லப்பட்டு பரிதாபப்பட வைக்கிறார். மோகினியாக மாறி மந்திரவாதியுடன் மோதுவதிலும் காதலனை கடத்த முயற்சிப்பதிலும் ஆவேசம். கொலையாளிகளை பழி தீர்ப்பதில் விறு விறுப்பு.

நிலா கேரக்டரில் ஒட்டவில்லை. இளவரசனை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் கடைசி காட்சியில் நிற்கிறார்.

இளவரசனாக வரும் ராஜா பாத்திரத்தில் அழுத்தமாய் பொருந்துகிறார். ஜகன் மோகினியிடம் காதல் வயப்படுவதில் இனிமை காட்டுகிறார். கொள்ளையன், அலைக்கள்ளனுடன் மோதுவதில் ஆவேசம்.

வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி சிரிக்க வைக்கின்றனர். மோசக்கார மந்திரவாதியாக கோட்டா சீனிவாசராவ் மிரட்டுகிறார். நமீதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசன் ரியாஸ்கான் பாத்திரங்களும் வலுவானவை.

திரைக்கதையை இன்னும் கூராக செதுக்கி இருக்கலாம்.

இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை.

Wednesday, May 12, 2010

பேராண்மை

இந்திய ராக்கெட்டை வீழ்த்தி வளர்ச்சியை நாசம் செய்ய வரும் வெளிநாட்டு தீவிரவாத கும்பலை ஐந்து மாணவிகளுடன் எதிர்த்து அழிக்குள் இளைஞன் கதை.

வன இலாகா ஊழியர் துருவன். பழங்குடி இனத்தை சேர்ந்தவன். என்.சி.சி. மாணவிகளுக்கு பயிற்சியும் அளிக்கிறான். துருவனிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து மாணவிகள் அவனை தாழ்ந்த ஜாதி என இழிவு படுத்துகின்றனர். மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர். தொல்லைகளை பொறுமையாக தாங்கிக்கொள்கிறான்.

அந்த மாணவிகளை காட்டுக்குள் ஒரு நாள் பயிற்சிக்காக அழைத்து போகிறான் துருவன். அங்கு வேன் விபத்தாகிறது. ஊருக்கு திரும்ப முடியாமல் மலை உச்சியில் டெண்ட் போட்டு தங்குகின்றனர். இருட்டில் இரு வெள்ளைக்காரர்கள் நவீன எந்திர துப்பாக்கிகளுடன் போவதை ஒரு மாணவி பார்த்து துருவனிடம் சொல்கிறாள். அவர்கள் இந்தியா ஏவ உள்ள ராக்கெட்டை அழிக்க வந்த அயல் தேச கூலிப்படை என்பதை துருவன் புரிகிறான். தீவிரவாதிகளை அழிக்க புறப்படுகிறான். மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து துருவனுடன் செல்கின்றனர்.

ஒரு இடத்தில் பதினாறு தீவிரவாத கும்பலை எதிர்த்து துருவனும் மாணவிகளும் சண்டையிடுகின்றனர். இரு மாணவிகள் பலியாகிறார்கள். இன்னொரு புறம் ராக்கெட்டை குறிபார்த்து சுட ஏவுகணையை நிறுத்தி விடுகின்றனர். அதை எப்படி தடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

துருவனாக வரும் ஜெயம் ரவி ராம்போ கெட்டப்பில் கம்பீரம் காட்டுகிறார். சாதி ரீதியாக உயர் அதிகாரியும் மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்குபயிற்சி அளிக்கும் துறுதுறுப்பில் முத்திரை பதிக்கிறார்.

மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் சீன்கள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்...

மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி.

கிளைமாக்ஸ் துப்பாக்கி சண்டை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஹைடெக் ரகம். காடே தீப்பிழம்பாகி சீட் நுனியில் உட்கார வைக்கிறது. ஜெயம் ரவி ஆக்ஷன் தனத்தை அழுத்தமாக பதித்துள்ளார். என்.சி.சி. மாணவிகளாக வரும் தன்சிகா, லியாஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தராவின் குறும்புத்தனங்களில் “ஏ” வாடை. இறுதியில் எந்திர துப்பாக்கிகளுடன் ஆவேசமாக சண்டையிட்டு அனல் பறத்துகின்றனர்.

வில்லனாக வரும் ஹாலிவுட் நடிகர் ரோலந்த் கிக்சிங்கும் அவர் கூட்டாளிகளும் மிரட்டுகின்றனர் வடிவேலு சிரிக்க வைக்கிறார். பொன்வண்ணன், ஊர்வசி பார்திரங்களும் கச்சிதம். ஜெயம் ரவியை சாதியை வைத்து இழிவு செய்வதிலேயே ஆரம்ப காட்சிகளை நீட்டிப்போவது சலிப்பூட்டுகிறது. இரட்டை அர்த்த வசனங்களும் தாராளமாய் புழங்குகின்றன. ஆனாலும் போகப்போக சீன்களை வேகப்படுத்தி ஹாலிவுட் தரத்துக்கு உயர்கிறார் இயக்குனர் ஜனநாதன். சாதாரண வன ஊழியர் சாதித்ததை மேலதிகாரி செய்ததாக பெயர் வாங்கி ஜனாதிபதி விருது பெறுவதன் மூலம் நடைமுறை குளறுபடிகளுக்கு குட்டும் வைத்துள்ளார்.

வித்யாசாகர் இசையும், காட்டுக்குள் நடக்கும் போரை கண்ணுக்குள் நிறுத்தும் சதீஷ்குமார் ஒளிப்பதிவும் பெரிய பலம்.

மூணார்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நிதிமா. அவருக்கும் வாடகை கார் நிறுவன அதிபர் பிரேம்குமாருக்கும் காதல் மலர்கிறது. நிதிமாவுக்கு பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தி தம்பித்துரையை திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் விஷயத்தை கணவனிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

இருவரும் மூணாருக்கு தேனிலவு செல்கின்றனர். அங்கு பழைய காதலன் பிரேம் வந்து நிதிதமாவை வலுக்கட்டாயமாக இழுக்கிறார். அவர் கூட்டாளிகள் தம்பித்துரையை மலையில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசுகின்றனர். பிறகு கொலை பழி தங்கள் மேல் விழாமல் இருக்க போலீசுக்கு பணம் கொடுத்து சரிகட்டுகின்றனர்.

தம்பித்துரையை பழங்குடியினர் குற்றுயிர் குலையுயிராய் தூக்கி போய் சாமியார் ஒருவரிடம் ஒப்படைத்து காப்பாற்றுகின்றனர். குணமானதும் தன்னை கொல்ல முயன்றவர்களை பழிக்குப் பழிவாங்குகிறார் தம்பித்துரை. அவரை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் புறப்படுகிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...

மூணாறில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிஜகொலை சம்பவத்தை கருவாக வைத்து கதை பின்னப்பட்டு உள்ளது. மர்ம உருவம் தொடர்ந்து கொலைகள் செய்வது திகில்.. கொலையாளி பற்றி துப்பு துலக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் ஆஜரானதும் விறுவிறுப்பு. விசாரணையில் நிதிமா கணவர் தான் கொலையாளி என தெரிவது திருப்பம்.

மூணார் பள்ளத்தாக்கு, சாமியார் மடம் என விசாரணை நீள்வது பரபரப்பு. தம்பித்துரை கொலையாளி வேடத்துக்கு பொருந்துகிறார். நிதிமா மனநோயாளியாக மருத்துவமனையில் பெரும் பகுதி வீணே கழிக்கிறார். அது நடிப்பு என தெரிவது திருப்பம். பிரேம் வில்ல காதலன்.

கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், ரகசியா, ஓ.ஏ.கே. சுந்தர், வடிவுக்கரசி, வையாபுரி ஆகியோரும் உள்ளனர்.

திரைக்கதை தாறுமாறாக தாவுவதும், நாடகத்தன காட்சிகளும் வேகத்தடை போடுகின்றன. தம்பித்துரை இயக்கியுள்ளார்.

ஆறுமுகம்

ஏழை இளைஞனுக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடக்கும் மோதலே கதை...

பிளாட்பாரத்தில் இட்லி கடை நடத்தும் பரத்தும் நிறைய தொழில் நிறுவனங்களின் முதலாளி ரம்யா கிருஷ்ணன் தம்பி சத்யாவும் சிறு வயது நண்பர்கள். இருவரும் பழகுவது ரம்யா கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. தம்பியை பிரித்து வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வரும் சத்யா திரும்பவும் பரத்துடன் நட்பை புதுப்பிக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ரம்யாகிருஷ்ணன் நண்பர்களை பிரிக்க மீண்டும் சதி செய்கிறார். அவர் திட்டம் வெல்கிறது. நண்பர்கள் எதிரியாகிறார்கள்.

பரத்தின் நிலத்தை அபகரித்து அவர் தாய் சமாதியை இடிக்கின்றனர். ஆவேசமாகும் பரத் ரம்யாகிருஷ்ணனுடன் மோதலில் இறங்குகிறார். பணத்தையும் புகழையும் அழித்து தெருவுக்கு கொண்டு வருவேன் என சவால் விடுகிறார். அதை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது மீதி கதை....

அழுக்கு உடம்பு கழுத்தில் துண்டு என இட்லி கடைக்காரருக்கு பொருந்துகிறார் பரத். தாய் பாசம், நட்பு, ஆவேசம் என பல முகம் காட்டுகிறார். ஆக்ஷனிலும் ஆக்ரோஷம். நண்பன் குடும்பத்தை தரக்குறைவாக பேசும் ரவுடியை புரட்டி எடுப்பது தங்கையிடம் சில்மிஷம் செய்யும் மந்திரி மகனை நைய புடைப்பது தாய் சமாதியை இடிப்பவர்களை எதிர்ப்பது என அனல் வீசுகிறார். ரம்யாகிருஷ்ணனை வீழ்த்த பாதி விலைக்கு குடியிருப்புகள் கட்டி கொடுப்பது பரபர....

பெரிய நடிகர்களுக்கான கேரக்டரில் துணிந்து இறங்கி ஜெயித்துள்ளார்.

ரம்யாகிருஷ்ணன் இன்னொரு நீலாம்பரியாக கர்ஜிக்கிறார். பார்வையில் முறைப்பு காட்டி அலட்டிக்காமல் நண்பர்களை பிரிக்கும் தந்திரங்கள் குரூரம்.

பிரியாமணி கவர்ச்சி காதலி. இட்லி பார்சல் செய்யும் கருணாசும் அவரை ஏமாற்றும் மயில்சாமியும் சிரிக்க வைக்கின்றனர். சீதாவும் சரண்யா மோகனும் அழகான அம்மா, தங்கையாக வருகிறார்கள். சத்யா நண்பனாக வந்து துரோகியாகி நிற்கிறார். அபிநய், இளவரசு, மகாதேவன் ஆகியோரும் உள்ளனர்.

கதையில் பழமை நெடி வீசினாலும் காட்சிகளில் புதுமை செய்து விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தேவாவின் இசை பெரிய பலம். பாடல்கள் இனிமை. எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவில் பிரமாண்டம்...

சி‌ந்‌தனை‌ செ‌ய்‌

பள்ளிப் பருவத்தில் குறிக்கோள் இல்லாதவர்கள் இளம் பருவத்தில் என்ன ஆவார்கள் என்பதை மையமாக வைத்து, புது வழியில் திரைக்கதை அமைத்து, புதியவர்கள் எடுத்த படம்.

கண்டதும் காதல்... உடனே கல்யாணம்... முதலிரவில் முறிகிறது நாயகன் யுவன், நாயகி மதுசந்தாவின் வாழ்க்கை. 'ஆம்பிளை என்றால் ஒரு பெண்ணுக்குச் சுகத்தை கொடுக்கணும்; இல்லேன்னா, சொத்தைக் கொடுக்கணும். இது இரண்டுமே இல்லாத உன்னுடன் வாழ முடியாது' என்று விரட்டி அடிக்கப்படும் யுவன், தன் பள்ளி நண்பர்களைச் சந்திக்கிறான்.

யுவன் சந்திக்கும் தன் இரண்டு நண்பர்களின் நிலையும் இப்படித்தான். சமுதாயம் அவமானப்படுத்தி, உதாசீனப்படுத்துகிறது. பணத்திற்காக, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாகச் சிறு தவறு செய்பவர்கள் அதையே தங்களது தினசரி பணியாகச் செய்யத் தொடங்குகிறார்கள்.

சிறு சிறு தவறுகள் செய்பவர்களுக்குப் பெரிய ஆசை வருகிறது. இதனால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க, ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடுகின்றனர். இதற்குத் தங்களுடன் பள்ளியில் படித்த இரண்டு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு ஐந்து கோடியைக் கொள்ளையடிக்கும் ஐந்து பேரும் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தன்னை உதாசீனப்படுத்திய தன் மனைவியை அவர் வழியிலேயே சென்று பழியும் தீர்த்துக்கொள்கிறார் படத்தின் நாயகன் யுவன். வங்கியில் எப்படி கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடிக்கும் ஐந்து பேரும் யாரால் எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் வீரியம் குறையாமலும் சொல்லுவதே படத்தின் முடிவு. படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் தன் திறமையை நிரூபித்து விடுகிறார்.எதிர்பாராத காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. இயக்குநராகவும் கதாநாயகனாகவும் படத்திற்கு முதுகெலும்பாகவும் விளங்குகிறார் யுவன்.

யுவனின் நண்பர்களாக வரும் செஷாந்த், நித்திஷ்குமார், சபி, பாலா, அனைவரும் அந்த அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பது மட்டும் அல்லாமல் நடிப்பிலும் பிளந்து கட்டியிருக்கிறார்கள்.சபியின் மனைவியாக வரும் தர்ஷா நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பின் அளவில் நிறைவு ஏற்படுத்தி விடுகிறார்.

மதுசர்மாவிடம் 'ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது' என்று 'காதல்' தண்டபாணி சொல்ல, அதற்கு, 'நானும் அதையே தான் சொல்கிறேன். என்னால் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது, அதனால் தான் இவனோடு வாழ என்னால் முடியாது" என்று கூறி, திரையரங்கின் ஒட்டுமொத்த கைத்தட்டலையும் பெற்றுவிடுகிறார் நாயகி மதுசர்மா.

ஒரு காட்சியில் வந்தாலும், உலுக்கி எடுக்கும் மயில்சாமி, இந்தப் படத்தில் ரகளை கட்டியிருக்கிறார். ஸ்ரீபவனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் ஒய்யாரம்.

படத்திற்குத் தமன் ஒரு நாயகன் என்று சொல்லலாம். அந்த அளவிற்குத் தனது அறிமுக இசையில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுகிறார். படத்தின் பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, தனக்கு என்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிக்கிறார்.

புதிய முயற்சிக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் இப்புதியவர்களையும் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் வரவேற்பார்கள்.

உன்‌னை‌ போ‌ல்‌ ஒருவன்‌

தமிழ்த் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட திரைக்கதை, இடைவேளை எதற்கு என்று எண்ணும் அளவிற்கு ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது படத்தின் விறுவிறுப்பு.

சாமானிய மக்களில் ஒருவரான கமல்ஹாசன், சென்னையில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கிறார். அதை அவரே காவல் துறை ஆணையரான மோகன்லாலிடம் தொலைபேசியில் தெரிவிக்கிறார். முதலில் அதை அலட்சியமாக அணுகும் மோகன்லால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதையும் அதைச் செயலிழக்க வைக்கும் வழியையும் கமலே தெரிவிக்க, விஷயம் தீவிரமானது என உணர்கிறார்.

வெடிகுண்டு வைத்த நபரைப் பிடிக்கத் திட்டம் தீட்டும் காவல் துறை, அதே நேரத்தில் எதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது? என்ன வேண்டும்? என்று கமலைக் கேட்கிறது. சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் தான் சொல்கிற இடத்திற்கு அவர்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கமல் காவல் துறையிடம் தெரிவிக்கிறார்.

அவர்களைக் காவல் துறை விடுதலை செய்ததா, அவர்களுக்கும் கமலுக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் படத்தின் முடிவு.

தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்படும் வழக்கமான திரைக்கதை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதே இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். ஒரு சாதாரண சம்பவத்தைச் சலிப்பு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, சுறுசுறுப்பாகப் படத்தை நகர்த்திய இயக்குநர் சக்ரிக்கு ஒரு பலமான பாராட்டு.

கடைசி வரைக்கும் தனது பாத்திரத்தின் பெயரைச் சொல்லாமல் தன் நடிப்பாலும், முக பாவனைகளாலும் ரசிகர்களைச் சொக்க வைத்திருக்கிறார் கமல்ஹாசன். இது இவருக்குப் புதியது அல்ல என்றாலும் முன்னணி நாயகனாக இருந்துகொண்டு இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது ஆச்சரியம்தான். (இதனால் தான் இவர் உலக நாயகன்!)

படத்திற்குக் கமல்ஹாசன் ஒரு கண் என்றால், ராகவன் மாறார் என்ற கதாபாத்திரத்தில் காவல் துறை ஆணையராக வரும் மோகன்லாலும் ஒரு கண். இந்த இரு கண்களும் ரசிகர்களின் கண்களின் இமைகளை ஒன்று சேரவிடாமல் பார்த்துக்கொள்வதில் போட்டி போடுகின்றன. மலையாளம் கலந்த தமிழில் பேசும் மோகன்லால், தனது நடிப்பால் மலைக்க வைத்துள்ளார்.

படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் அவை தனி ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளன. பின்னணி இசையில் தன்னை முன்னணியில் நிறுத்திக்கொள்ள ஸ்ருதிஹாசன் முயன்றுள்ளார்.

சிற்பி சிலையைச் செதுக்குவதைப் போல படத்தின் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனி. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முதன்மை வகிக்கும் கமல்ஹாசன், இப்படத்தில் 'ரெட் ஒன்' கேமராவைப் பயன்படுத்தியுள்ளார்.

மக்களைச் சிந்திக்க வைக்கும் படமாக இருந்தாலும் தனது நையாண்டி வசனத்தின் மூலம் சிரிக்கவும் வைத்துள்ளார் வசனகர்த்தா கமல்ஹாசன். எப்போதும் போல கடவுளிடம் தனக்கு உள்ள பகையை இப்படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல்.

மக்களுக்குப் பாடமாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில், மோகன்லால் கமலிடம் ஒரு காட்சியில் வெடிகுண்டு தயாரிக்க யார் சொல்லிக் கொடுத்தது, உன் குடும்பத்தில் யாராவது வெடிகுண்டு செய்கிறார்களா என்று கேட்க, இணையதளத் தேடலில் வெடிகுண்டு என்று அடித்து பாருங்கள். புகைப்படங்களுடன் உங்களுக்கு வெடிகுண்டு செய்வதை வகுப்பு எடுப்பார்கள் என்று கமல் கூறுவதைக் கேட்டு வெடிகுண்டு தயாரிக்காமல் இருந்தால் சரி. நமது மக்கள் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களைத் தான் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

கண்ணுக்குள்ளே

Justify Fullமிதுன், யுகேந்திரன் பள்ளித்தோழர்கள். தாய், தந்தையை இழந்த மிதுன் பாதிரியார் சரத்பாபு பாதுகாப்பில் வளர்கிறார். சிறுவயதில் விளையாடும்போது யுகேந்திரனால் அவர் கண்பார்வை போகிறது. பார்வையிழந்தோர் பள்ளியில் படித்து வயலின் கலைஞராகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு சென்று நண்பனை சந்திக்கிறார். அதே ஊரில் சர்ச்சில் வேலைக்கும் சேருகிறார். பார்வையற்றவர் என முறைப்பெண் கட்டிக்க மறுக்கிறாள். யுகேந்திரன் தங்கை அனுவுக்கு மிதுன் மேல் பரிதாபம் வருகிறது. பிறகு அதுவே காதலாக மலர்கிறது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.

அப்போது யுகேந்திரன் விபத்தில் சிக்குகிறார். தனது கண்களை மிதுனுக்கு தானமாக கொடுத்து விட்டு இறந்து போகிறார். கண் பார்வை பெறும் மிதுன் காதலி அனுவை விட்டு விட்டு மாயமாகிறார். சினிமாவில் வயலின் கலைஞராகி அபர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார். குழந்தையும் பிறக்கிறது. பிறகு மீண்டும் அனுவை தேடி ஊருக்கு வருகிறார். காதலியை உதறி விட்டு ஓடியது ஏன்? மீண்டும் அனுவை சந்தித்தாரா? போன்றவற்றுக்கு நெஞ்சை உருக்கி பதில் தருகிறது கிளைமாக்ஸ்...

பட படவென பேசும் மனைவியாக அபர்ணா, தாடி பைஜாமாவுடன் அமைதியான கணவராக மிதுன். வெடுக்கென பேசும் குட்டிக்குழந்தை என ஆரம்ப “சீன்”களே வித்தியாசப்படுகின்றன. மனைவி ஏச்சுக்களை தாங்கி எதையோ பறி கொடுத்தவராக இருக்கும் மிதுன் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்.

ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறும் மிதுன் நினைவில் பிளாஷ்பேக்கில் அனு காதல். இருவரின் சந்திப்புகளும் இதய பரிமாற்றங்களும் கவித்துவம். காதலி வீடு பாழடைந்து கிடப்பது பார்த்து தவிக்கையில் மனதில் கிறங்குகிறார். பாதிரியாரிடம் அனுவை விட்டு விலகிய காரணங்கள் சொல்லி அவரை பார்க்க வேண்டும் என்று துடித்து அடங்கி போகும் அந்த கிளைமாக்ஸ் இதயங்களை பிழிந்து போடுகிறது. அன்பு, காதல், சோகம் என அத்தனையையும் முகத்தில் காட்டி தேர்ந்த நடிகராக ஒளிர்கிறார் மிதுன். அபர்ணா சிடு மூஞ்சி மனைவியாக வாழ்கிறார். அனு அன்பான காதலி.

சரத்பாபு, யுகேந்திரன், சண்முகராஜன் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. சிங்கமுத்து, முத்துக்காளையின் பஸ் பயண காமெடி சரவெடி. பார்வை இழந்த இளைஞனின் காதலை உயிரோட்டமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் லேனா மூவேந்தர்.

பழைய பாணியில் சில காட்சிகள் நகர்ந்தாலும் இறுதி சீன்கள் ஜீவனாக நிற்கின்றன. இளையராஜா இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.

சொல்ல சொல்ல இனிக்கும்

நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுபவர் நவ்தீப். வெளியூரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வரும் சாரா மேல் பிரியம் வருகிறது. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். நவ்தீப் ஒருதலையாய் காதலிக்கிறார். சாராவோ காதலை ஏற்க மறுத்து ஊருக்கு போய் விடுகிறார்.

பிறகு ஓட்டலில் ஆடும் சுஜாவிடம் பழகி காதல் வயப்படுகிறார். அதுவும் முறிகிறது. ஓட்டல் நடத்தும் மதுமீதாவை காதலிக்கிறார். மதுவோ நப்தீப் பின் நண்பரை விரும்புவதாக சொல்கிறார். வெறுத்து போகும் நவ்தீப் வெளிநாடு போக தயாராகிறார்.

அப்போது பாங்கியில் வேலை பார்க்கும் மல்லிகா கபூர் மனதை பறிக்கிறார். அவர் பின்னால் சுற்றி காதல் கணை ஏவுகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகாகபூரும் காதலை ஏற்கிறார்.

இந்த நிலையில் நவ்தீப் நண்பன் அபிநய் மதுமிதாவை கர்ப்பமாக்கி விட்டு கை கழுவ முயற்சிக்கிறார். மதுமீதாவால் நவ்தீப்பை தவறாக புரிகிறார் மல்லிகாகபூர். காதலையும் முறிக்கிறார். காதல் தோற்ற நிலையிலும் நண்பனுக்கும் மதுமீதாவுக்கும் திருமணம் செய்து வைக்க போராடுகிறார் நவ்தீப். அதில் வென்றாரா என்பது கிளைமாக்ஸ்...

தொடர் காதல் தோல்வியில் வெதும்பும் இளைஞன் பாத்திரத்தில் நவ்தீப் வருகிறார்.,சாரா, சுஜா காதல் சுற்றல்கள் மேம்போக்காக இருந்தாலும் மதுமிதாவை காதலித்து தோற்கையில் வலி ஏற்படுத்துகிறார். நண்பனால் மோசம் போன மதுமிதாவை அவரோடு சேர்த்து வைக்க முயற்சிப்பது அழுத்தம்...

கழுத்தில் மாலையை போட்டு எது கேட்டாலும் செய்து கொடுக்கும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வெளுக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரை வைத்து கர்ப்பமான மதுமிதாவை அபிநய் விரட்டத்துணிவதும் மதுமீதாவுக்கு நவ்தீப் ஆதரவாக களம் இங்குவதும் பரபரப்பு. இறுதியில் பிரகாஷ்ராஜுக்கு மாலை போட்டு தனக்கு ஆதுரவாக திருப்பும் நவ்தீப் தந்திரம் கைதட்டல்.

பிரகாஷ்ராஜும் போலீஸ் அதிகாரியாக வரும் ஆஷிஷ் வித்யாத்தியும் நெருப்பு பார்வை பறிமாறுவதில் ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு கடைசியில் எதுவும் இல்லாமல் போவது ஏமாற்றம்.

மதுமிதாவை ஏமாற்றி விட்டு தப்பும் அபிநய் வில்லத்தனம் எதிர்பாராதது. நப்தீப் நல்ல குணத்தில் ஈர்ப்பாகும் மதுமீதா திடீரென்று அபிநய்யை விரும்புவதாக சொல்வது ஓட்டவில்லை. சார்லி, சத்யன் சிரிக்க வைக்கின்றனர்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை. இளஞ்ஜோடிகளின் வாழ்வியலை ஜாலியாக படமாக்கியுள்ளார் இயக்குனர் முரளி அப்பாஸ்.

ஈரம்

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் குளியல் அறையில் கார் கம்பெனி என்ஜினீயர் நந்தா மனைவி சிந்து மேனன் இறந்து கிடக்கிறார். அவர் ஜாக்கெட்டில் இருந்து என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்ற கடிதத்தை போலீஸ் கைப்பற்றுகிறது. அக்கடிதத்தை வைத்து வழக்கை முடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இறந்தது தனது கல்லூரி காதலி என உதவி கமிஷனர் ஆதிக்கு தெரிய வருகிறது. வழக்கு விசாரணையை தானே எடுத்து நடத்துகிறார்.

சாவு மர்மத்தை கண்டு பிடிக்க கணவன், பக்கத்து வீட்டுக்காரர்கள் என விசாரணையை தொடர்கிறார். அப்போது எதிர் வீட்டில் வசித்த வயதான பெண் திடீரென சாகிறார். அக்குடியிருப்புக்கு காதலியை தேடி வரும் இளைஞன், வாட்ச்மேன், இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் போன்றோரும் அடுத்தடுத்து இறக்கிறார்கள்.

ஆதிக்கு நடப்பது சாதாரண சாவுகள் அல்ல கொலைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. கொலையாளியை தேடுகிறார். அப்போது கொலைகளை செய்வது ஒரு ஆவி என தெரிய உதறல். பேயாக வருவது யார்? எதற்காக பழி வாங்குகிறார் என்பது பிளாஷ் பேக்...

ஆவி கதையை வழக்கமான பாணியில் இல்லாமல் நவீன பாணியில் படமாக்கி சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் அறிவழகன். தண்ணீரில் ஆவி ஊடுருவி பழி தீர்க்கும் யுக்தி வித்தியாசமானது.

பிரமாண்ட அடுக்கு மாடி கட்டிடம் அமைதியான இரவு... அறைக்குள் பிணம்... அவ்வீட்டுக்குள் இருந்து கதவு வழியாக வெளியே பாயும் வெள்ளம் என ஆரம்பமே அமர்க்களமான மிரட்டல், ஒவ்வொரு சாவும் தண்ணீரிலேயே நடப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. தியேட்டர் பாத்ரூமில் ஒருவன் செத்து விழ தண்ணீரில் கால் தடம் மட்டும் பதிய மர்ம உருவம் நடந்து செல்வது குலை நடுக்கம். பல காட்சிகள் மழை, நீர் என ஈரத்தோடு சம்பந்தப்படுத்தி நுணுக்கமாக நகர்த்தியது ஒன்றச் செய்கிறது.

ஆதி மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஓடும் பஸ்சில் சிந்து மேனனை காதல் செய்யும் காட்சிகள் கவிதை...

விசாரணைகளில் போலீசின் விறைப்பு காட்டுகிறார். ஒரு கட்டத்தில் சாவுகளுக்கு காரணம் ஆவி என்று அறிவதும் பேய் மூலமே எதற்காக கொலைகள் நடக்கின்றன. என அவர் தெரிந்து கொள்வதும் விறு விறுப்பானவை.

அன்பான கணவனாக வரும் நந்தா திடீர் என குணம் மாறுவது எதிர்பாராதது. சிந்து மேனன் அழகான காதலியாகவும் மனைவியாகவும் வருகிறார். சாகடிக்கப்படும் போது பரிதாபபட வைக்கிறார்.

காதல் கண்ணன், ஸ்ரீநாத், பாய்ஸ் ராஜன், ராஜசேகர், சரண்யா மோகன், லட்சுமி ராமகிருஷ்ணன் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. கதையிலும் காட்சிகளிலும் ஹாலிவுட் தரம்.

கொலையாளி தெரிந்த பிறகும் காட்சிகள் ஜவ்வாக நீள்வதை குறைத்து இருக்கலாம். தமன் இசையும், மனோஜ் ஒளிப்பதிவும் கைகுலுக்கும் ரகம்.

“ஹைடெக்” திகில் படம்.

நினைத்தாலே இனிக்கும்

பிருதிவிராஜும் ஷக்தியும் ஒரே காலேஜ் நண்பர்கள். உள்ளூர் எம்.எல்.ஏ. மகள் பிரியாமணியும் அங்கு படிக்கிறார். சக மாணவன் கார்த்திக்குமாரும் பிருதிவிராஜும் அடிக்கடி மோதுகிறார்கள். நட்பை நேசிக்கும் ஷக்திக்கு அவர்களை சமாதானபடுத்துவதே வேலை.

ஒரு கட்டத்தில் பிருதிவிராஜுக்கும் பிரியாமணிக்கும் காதல் மலர்கிறது. தொடர்ந்து கல்லூரி மாணவர் தேர்தலும் வருகிறது. தலைவர் பதவிக்கு பிருத்திவி நிற்கிறார். அவரை அசிங்கபடுத்த பிருத்தியும் பிரியாணியும் நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓட்டுப்பெட்டிக்குள் போட்டு விடுகிறார் கார்த்திக். விஷயம் தெரிந்து அந்த போட்டோவை எடுக்க முயன்று தோற்கிறார் பிருத்வி. அப்போது எதிர்பாராதவிதமாக ஷக்தி ஜெனரேட்டர் அறையில் இறந்து கிடக்கிறார்.

அடுத்தடுத்து அதிர்ச்சியில் உறையும் பிருத்வி கல்லூரி படிப்பை விட்டு விட்டு வெளியூர் போய் விடுகிறார். பிரியாமணியும் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்.

ஷக்தியின் எட்டாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் எல்லோரையும் அதே கல்லூரிக்கு அழைக்கிறார் அவரது தந்தை பாக்யராஜ். வெவ்வேறு ஊர்களில் இருந்து மனைவி குழந்தைகளுடன் நண்பர்கள் அங்கு ஒன்று கூடுகிறார்கள். பிருதிவிராஜ், பிரியாமணி, கார்த்திக்குமாரும் வருகிறார்கள். வந்த திட்டத்தில் பிருத்வியை கழுத்தை இறுக்கி யாரோ கொல்ல முயற்சிக்கின்றனர். கொல்ல வந்தது யார்? பிரியாமணி, பிருத்வி காதல் என்ன ஆனது. ஷக்தி இறந்த மர்மம் போன்ற முடிச்சுகள் அவிழ்வது கிளைமாக்ஸ்.

கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல் என கலகலப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன், கல்லூரி விடுதியில் நடக்கும் கலாட்டாக்கள் சீண்டல்கள் பெரிசுகளை ஆட்டோகிராப் நினைவுகளாய் தொற்றும் வகை. கோபம் காட்டும் யதார்த்தவாதியாக வருகிறார் பிருத்விராஜ். விடுதி உணவில் கரப்பான்பூச்சியை பார்த்து கல்லூரி முதல்வரிடம் ஆவேசப்படுவது, மாணவர் தேர்தல் நடத்த சொல்லி மாணவர்களை திரட்டி போராடுவது என முன் நிற்கிறார்.

நண்பன் இறப்பு காதல் தோல்வி என துவண்டு ஊரை விட்டு ஓடி பரிதாபபட வைக்கிறார். எல்லோருக்கும் நல்ல நண்பனாக வரும் ஷக்தி நட்பில் அழுத்தம் பதிக்கிறார். அவரது திடீர் மரணம் எதிர்பாராதது. கல்லூரி மாணவி கேரக்டரில் பிரியாமணி ஒட்டவில்லை. நாடகத்தனமாய் வந்து போகிறார். பாடலில் கவர்ச்சி. தனது போஸ்டரில் ஆபாச வார்த்தையை கண்டு பிருத்வி மேல் ஆத்திரப்படுவதும் அவர் பக்கம் தப்பில்லை என்று அறிந்து கலங்கவதும் நிறைவு.

கார்த்திக்குமார் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஷக்தி மரணம் சாதாரணமானது அல்ல கொலை என்று தெரிவதும் அவரை சுற்றி திரை மறைவில் நகர்த்தப்படும் கதையும் வலுவானவை காட்சிகளை உயிரோட்டமாக தொகுத்து இருந்தால் இன்னும் இனித்திருக்கும்.

மனோபாலா, இளவரசு, அனுஜா அய்யர், விஷ்ணு ஆகியோரும் உள்ளனர். ஷக்தி தந்தையாக பாக்யராஜ் மனதில் நிற்கிறார். விஜய் ஆண்டனி இசையில் அழகாய் பூக்குதே பாடல் இனிய மெலடி.

Tuesday, May 11, 2010

மலை‌யன்‌

தம்பியிடம் பாசம், காதலியிடம் நேசம், முதலாளியிடம் விசுவாசம் என அத்தனை வாசங்களுடன் தனது நடிப்பையும் சேர்த்து அரைத்த 'கரண் மசாலா' தான் இந்த மலையன்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் கரண் தன் முதலாளியான சரத்பாபுவின் மீது அளவு கடந்த விசுவாசம் வைத்திருக்கிறார். ஏன் இந்த அநியாய விசுவாசம் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் சொல்ல இயக்குநர் மறக்கவில்லை. சிறுவயதில் தன் அம்மாவுடன் பஞ்சம் பிழைக்கப் பசியுடன் வரும் கரணுக்கு சோறு போட்டு ஆதரவு கொடுக்கிறார் சரத்பாபு. அதனால் தான் கரண் தன் முதலாளியிடம் விசுவாசமாக இருக்கிறார்.

ஒரு புறம் தன் தம்பியை கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறார். மறுபுறம் இஷ்டப்பட்டு ஷம்முவைக் காதலிக்கிறார். வில்லன் இல்லையா ! என்கிறீர்களா? இருக்கிறார் ராஜன் பி.தேவ் மற்றும் அவருடைய மகனான சக்தி குமார். கரணின் முதலாளியைத் தொழில் ரீதியான போட்டியின் காரணமாகக் கொலை செய்ய முயல்கிறார்கள். இதனால் கரணுக்கு எதிரியாகிறார்கள்.

எதிரிகளைக் கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு, தனது காதல் காட்சியை ஷம்முவுடன் தொடங்கும் கரணுக்கு அடுத்ததாக வருவது செண்டிமென்ட். கரண். ஷம்மு காதல் விவகாரம் ஷம்முவின் குடும்பத்திற்குத் தெரிய வருகிறது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கரணைக் கைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார் ஷம்மு. கரணும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொள்வோம் என்ற உறுதியுடன் இருக்கிறார். இந்த நல்ல மனதிற்காகக் கரணுக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதம் தெரிவிகிறார் ஷம்முவின் தந்தையான பாலா சிங்.

இந்நிலையில் கரண் பணிபுரியும் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, கரணின் காதலி உட்பட ஏராளமான தொழிலாளர்கள் இறந்து போகின்றனர். இச்சம்பவம் விபத்தல்ல; தன் முதலாளியின் எதிரிகளான சக்தி குமாரின் சதி தான் என்ற சந்தேகத்தில் அவர்களைக் கொல்லத் துடிக்கும் கரணுக்குப் பகீர் என்ற ஒரு உண்மை தெரிய வருகிறது. இச்சம்பவத்திற்கு காரணம் சக்தி குமார் இல்லை; தன் முதலாளியான சரத்பாபு தான் என்று. ஏன் சரத்பாபு அப்படி செய்தார்? சரத்பாபுவைக் கரண் என்ன செய்தார் என்பதே படத்தின் இறுதிக் காட்சி.

பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும் கதாபாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் நடிகர் கரண். தன் முதலாளியைக் கொல்ல எண்ணியவர்களைக் கொலை வெறியுடன் துரத்தும் கரணின் நடிப்பு நம்மை மிரள வைக்கிறது. அதே சமயம் அதிகமாக மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் அதிகப்படியாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

ஷம்மு கிராமத்துப் பெண் ரவுடி அல்லது சுட்டித் தனம் செய்யும் செல்லப் பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று சொல்லலாம். கிராமத்து 'கெட்டப்' ஷம்முவுக்குத் தேவையா என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.

சரத்பாபு, சக்தி குமார், ராஜன் பி.தேவ், கஞ்சா கருப்பு, பாலாசிங், உதயதாரா,மயில்சாமி என அத்தனை நடிகர்களும் கரண் கட்டும் வீட்டுக்குச் செங்கல் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் எம்.பி. கோபி சிவகாசி பட்டாசு தொழிற்சாலையும் அதைச் சார்ந்த மக்களும் என்ற கருவை வைத்து, கரணுக்காகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளும் அதைப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஈசா‌

உப்பு வயலைக் கதைக் களமாகக் கையாண்டுள்ள இயக்குநர், படத்தின் ஆரம்பத்திலே பார்ப்பவர்களைப் பதற வைக்கும் காட்சியுடன் கதாநாயகனை அறிமுகம் செய்கிறார். விக்னேஷ் ஒருவரைக் கொலை செய்து, தன் வீட்டுக்குக் கொண்டு வந்து, தூங்கும் தன் மனைவியிடம், 'நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்' என்று கூற, எழுந்து பார்க்கும் லட்சணாவின் முகத்தில் ஆடி மாத தள்ளுபடியில் அள்ளி வந்த சேலையைப் பார்த்த மகிழ்ச்சி.

அப்படியே தன் கணவனிடம் உள்ள கத்தியை வாங்கி, அந்தப் பிணத்தை வெட்டி விட்டு, "மத்தவனுங்க எங்க?" என்று கேட்க, அதற்குக் "கொண்டு வர்றேன்" என்று கிளம்பும் விக்னேஷ், வெறியுடன் அடுத்தடுத்து கொலைகளைச் செய்கிறார். இதற்கிடையில் விக்னேஷ் பேசிக் கொண்டிருப்பது அவருடைய மனைவி அல்ல; மனைவியுடைய பிணத்திடம் என்பதைப் படத்தின் இடைவேளையில் சொல்லியிருக்கும் இயக்குநர் படத்திற்கு இன்னும் விறுவிறுப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஏன் இந்தக் கொலை வெறி என்பதற்கு ஒரு ஃபிளாஸ் பேக். ஃபிளாஸ் பேக் முடிந்ததும், விக்னேஷைத் துரத்துகிறது காவல் துறை. சிக்கினாரா, இல்லையா என்பது படத்தின் முடிவு.

தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு என்று நினைத்தாரோ, என்னவோ நாபிக் கமலத்தில் இருந்து நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ். பாம்புகள், தவளைகள், பிணங்களின் நடிவே ஒரு தவமாகவே இப்படத்திற்கு உழைத்திருக்கிறார். 'பிதாமகன்' படத்தில் விக்ரமின் நடிப்பைப் பின் தொடர்வது போல சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அதைத் தவிர்த்திருந்தால் இவரும் தனித்துவம் பெற்றிருப்பார்.

லட்சணா, உப்பளத்தில் வேலை செய்யும் பெண்ணாக, வியக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். விக்னேஷூக்கும் இவருக்கும் உள்ள பொருத்தம், உப்புக்கும் கடல் நீருக்கும் உள்ள நெருக்கத்தைப் போல உள்ளது.

காமெடி களத்தில் 'லொல்லு சபா' மனோகரும், எம்.எஸ். பாஸ்கரும் தோன்றும் காட்சிகள், அலுத்துக்கொள்ளும் வகையில் இல்லை என்றாலும். சிரிக்கும் வகையில் இல்லை என்பது தான் வருத்தம். இதில் ஒரு பாடல் வேறு இவர்களுக்கு.

அண்ணாச்சிகளில் மூத்த அண்ணாச்சியாக வரும் புது முக வில்லன், தோற்றத்தில் வில்லனாக இருந்தாலும் நடிப்பில் நல்லவராகவே இருக்கிறார். புது முக இசையமப்பாளர் ஹரண், 'ஒரு முறை நீ பார்த்தால்...' என்ற பாடல் மூலம் வருடுகிறார். படத்தின் பின்னணி இசையில் காட்சிகளுக்குக் கம்பீரத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷும், சண்டைப் பயிற்சியாளர் டிரேகன் சிங்லீயும் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, அரங்கையே அதிர வைக்கிறது. அதுவும் தண்ணீரில் மிதக்கும் வாழை மட்டை மீது அமைக்கப்பட்டிருப்பது இயக்குநருக்கு ஒரு 'பலே' போட வைக்கிறது.

'ஈசா' பழைய உப்புமாவாக இருந்த்தாலும் அதைக் கிண்டிய விதம் புதியது.

மதுரை சம்பவம்

தாதாக்களுக்கும் என்கவுண்டர் பெண் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதலே கதை.

இறைச்சி கடை நடத்தும் தாதா ராதாரவி. போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராயம் என சம்பாதிக்கும் அவன் ஏழைகளுக்கும் வாரி வழங்குகிறார். மகன் ஹரிகுமாரும் மருமகனும் அவருக்கு உதவியாய் இருக்கின்றனர்.

ராதாரவிக்கும் காதல் தண்டபாணிக்கும் தொழில் போட்டி வருகிறது. தண்டபாணியின் கள்ளச்சாராய வியாபாரத்தை ஹரிகுமார் அழிக்கிறார். எம்.பி.யாகும் அவர் ராதாரவி குடும்பத்தை அழிக்க போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து திட்டமிடுகிறார் அரசுக்கும் அறிக்கை அனுப்புகிறார்.

இதையடுத்து என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுயா அவ்வூருக்கு வரவழைக்கப்படுகிறார். ஹரிகுமாருக்கும் அனுயாவுக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகிறது. ரவுடி தொழிலை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். இன்னொரு புறம் ராதாரவியும் அவர் மருமகனும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஹரிகுமாரையும் தீர்த்துகட்ட திட்டம் நடக்கிறது. கொலையாளி யார்? ஹரிகுமார் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்...

அதிரடி ஆக்ஷனில் காதலை புகுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் யுரேகா. இறைச்சி கூடத்தில் கட்ட பஞ்சாயத்து கொலைகள், கடத்தல் பிசினஸ் என்பது வித்தியாசமான களம். ராதாரவி கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார். இளம் பெண்ணை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளிக்கு அளிக்கும் தண்டனை திக்... ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவே இந்த சமூக விரோத செயல்கள் என அவர் நியாயம் கற்பிப்பது சினிமாத்தனம்.

ஹரிகுமார் அதிரடி நாயகனாக பொளந்து கட்டுகிறார் எதிரியின் சாராய உறலை எரித்து அடியாட்களை துவம்சம் செய்யும் ஆரம்பமே அட்டகாசம்... போலீஸ் அதிகாரி அனுயா மேல் காதல் வயப்பட்டு அவரை முத்தமிடுவது “கிளுகிளுப்பு” காதலி முன்னால் அடங்கிப்போவது அவர் சொல்படி தந்தையை போலீசில் சரணடைய வைப்பது அழுத்தமானவை. கிளைமாக்சில் போலீஸ் காதலிதான் தந்தை, அத்தான் இருவரையும் கொன்றவர் என தெரிந்து அதிர்வதும்... ஆவேசமாகி சுட்டுக்கொல்வதும் உதறல் திருப்பங்கள்.

அனுயா அழகும் கடுகடுப்புமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஹரிகுமார் குடும்பத்துடன் நட்பாக பழகும் அவர் ரவுடிகளை ஏவி ராதாரவி மருமகனை கொல்வதும்.. ராதாரவியை வேனில் இருந்து இறக்கி சுட்டுத்தள்ளுவதும் பயங்கரம்.

கார்த்திகாவுக்கு வேலை இல்லை. காதல் தண்டபாணி ஆவேசமாக வந்து அநியாயமாய் சாகிறார். ஆனந்த்பாபுவின் அடியாள் பாத்திரம் வலுவானது. பொன்னம்பலம் காமெடியான குரூர வில்லன். பழைய தாதா கதையென்றாலும் காட்சியமைப்பின் வித்தியாசம் ஒன்ற செய்கிறது. ஜான் பீட்டர் இசை, சுகுமார் ஒளிப்பதிவு பலம்.

கந்தசாமி


கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் சி.பி.ஐ. அதிகாரி கதை.

முருகன் கோவில் மரத்தில் ஏழைகள், பணக்கஷ்டங்களை தீர்க்க வேண்டி துண்டு சீட்டுகள் எழுதி கட்டிச்செல்கின்றனர். மறுநாள் அவர்கள் வீட்டு வாசல்களில் கடவுள் கந்தசாமி பெயரில் பணப்பைகள் கிடக்கின்றன.

இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வJustify Fullருகிறார்.

இன்னொரு புறம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சி.பி.ஐ. அதிகாரி விக்ரம் கறுப்பு பண முதலைகளை வேட்டையாடி கோடி கோடியாய் பணத்தை மீட்கிறார். பாங்கியில் ஆயிரம் கோடி மோசடி செய்து பதுக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டிலும் சோதனை நடத்தி கட்டுகட்டாய் பணம் எடுக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ஆஷிஸ் மகள் ஸ்ரேயா விக்ரமை பழி வாங்க துடிக்கிறார்.

கறுப்பு பணத்துடன் சொகுசு பஸ்சில் சுற்றும் ராஜ்மோகனையும் விக்ரம் சிக்கவைத்து ஒரு கிராமத்தை தத்தெடுக்க செய்கிறார்.

விக்ரமால் பாத்திக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தந்திரமாக தங்கள் வலையில் விழவைக்கின்றனர். அப்போது கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு கந்தசாமி கடவுள் பெயரில் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் நபர் விக்ரம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. போலீசில் காட்டி கொடுக்காமல் இருக்க தங்களிடம் இருந்து பறித்த பணத்தை திருப்பி தரவேண்டும் என கெடு வைக்கின்றனர். விக்ரம் அதை ஏற்பது போல் நடிக்கிறார். அவர்கள் கூட்டாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார். அப்போது வெளிநாட்டு பாங்கிகளில் இந்தியர்கள் மேலும் ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பது தெரிய வருகிறது. அவர்களை பிடிக்க காய்நகர்த்துகிறார். அந்த கூட்டத்தின் முக்கிய புள்ளி அலெக்சை கைது செய்து ஆதாரங்களுடன் நிருபிக்க முயற்சிக்கிறார். அப்போது கறுப்பு பண கும்பல் அலெக்சை கொல்கிறது. டி.ஐ.ஜி. பிரபுவும் விக்ரமை அடையாளம் கண்டு கைது செய்ய நெருங்குகிறார். கறுப்பு பண முதலைகளை மக்கள் மன்றத்தில் தோலுரிப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதும் கிளைமாக்ஸ்...

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம்.

ஏழை பெண் கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த பணத்தை அபகரிக்கும் மன்சூர் அலிகானை சேவல் கோழி வேஷத்தில் கொக்கரக்கோ என கூவியும் கோழி போல் நடந்தும் அந்தரத்தில் தாவியும் பறந்து துவம்சம் செய்யும் ஆரம்பமே சூப்பர்மேன் ஸ்டைல்.

சோளக்கொல்லையில் அதே ரூபத்தில் கத்தி ஈட்டிகளுடன் பாயும் ரவுடிகளை அந்தரத்தில் பறந்து தாக்கி அழிப்பது “சீட்” நுனியில் உட்கார வைக்கும் சண்டை. அது படமாக்கப்பட்டுள்ள விதம் ஆங்கில படங்களுக்கு சவால் விடுகிறது.

ஐஸ்வர்யாராய் போல் அழகி வேண்டி கோவில் மரத்தில் துண்டு சீட்டு கட்டும் சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்ட பெண் வேடமிட்டு நடனமாடி நையபுடைக்கும் சீன்கள் கலகலப்பானவை.

சி.பி.ஐ. அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார். மெக்சிகோவில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வில்லன்களுடன் மோதி அழிக்கும் சண்டைக் காட்சி பிரமிப்பு. ஆக்ஷனில் இன்னொரு சிகரம் தொட்டுள்ளார் விக்ரம்.

ஸ்ரேயா வில்லி காதலி, கவர்ச்சியில் தாராள மயம்... ஆடையிலும் மேக்கப்பிலும் அன்னியமாய் தெரிகிறார்.

பிரபு அமைதியான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார். தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு காமெடி பெரிய பலம். பக்தர்களிடம் பணம் வசூலிக்க கந்தசாமி போல் வேடமிட்டு மன்சூர்அலிகானிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் போலீசை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பிரபு விசாரணை நடத்தும் போது குளித்து துணி துவைக்கும் சீன்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கிருஷ்ணா, ஆஷிஸ் வித்யார்த்தி, அலெக்ஸ் வில்லத்தனங்கள் மிரட்டல்...

வில்லன் கிருஷ்ணாவின் சொகுசு பஸ் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறை பிரமிக்க வைக்கின்றன.

“ஹைடெக்” தரத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசிகணேசன். கந்தசாமியாக விக்ரம் செய்யும் தர்மகாரியங்களுக்கு உதவும் சக கூட்டாளிகளின் நெட்வொர்க் வலுவானவை. “கறுப்பு பணம்” என்பது பழைய கருவாக இருந்தாலும் காட்சிகளின் புதுமை விறுவிறுப்பு ஏற்றுகிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி” பாடல் முணு முணுக்க வைக்கிறது. என்கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

சிவகிரி


கல்லூரியில் மூன்று பேராசிரியர்கள் கொல்லப்படுகின்றனர். அக்கல்லூரியில் மாணவனாக சேர்கிறார் போலீஸ் அதிகாரி சிவகிரி. கொலைக்கு சில மாணவர்கள் காரணமாக இருப்பதை கண்டுபிடித்து கைது செய்கிறார்.

இன்னொரு புறம் ரிஷா செல்போனில் குறிப்பிட்ட ஒருவரை கொல்லப்போவதாக கிராஸ்டாக் வருகிறது. அது பற்றி சிவகிரிக்கு சொல்கிறார். போலீசாரை அவர் உஷார்படுத்துகிறார். அதற்குள் அந்த நபர் சாகடிக்கப்படுகிறார். பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக இன்னொரு கிராஸ் டாக்கும் வருகிறது. அந்த பள்ளிக்கூடத்தில் போலீஸ் படையுடன் முகாமிட்டு துருவி துருவி தேடுகிறார். ஆனால் குண்டு எதுவும் இல்லை. குண்டுக்கு பயந்து மாணவர்கள் வெளியே ஓடும் போது மூன்று சிறுவர்கள் பலியாகின்றனர். பொய் தகவல் கொடுத்ததாக ரிஷாவை எச்சரிக்கிறார்.

சமூக விரோத காரியங்களில் ஈடுபடும் நபரை தீவிரமாக தேடுகிறார் சிவகிரி.

அப்போது கொலையாளி தனது நண்பன் குகன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. நண்பனுடன் மோதி அழிப்பது கிளைமாக்ஸ்...
குண்டு உடம்புடன் கல்லூரி மாணவராக வரும் சிவகிரி கேணையாக நடந்து சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரி கெட்டப்புக்கு மாறியதும் மிடுக்கு.

தொழில் அதிபர் கொலை பள்ளிக்குள் நடக்கும் வெடிகுண்டு சோதனைகள் பரபரக்கின்றன. திரைக்கதை வலுவில்லாமல் நகர்வது குறை.
சமூக விரோத கும்பல் தலைவன் நண்பன் என தெரிய வருவது திருப்பம். காட்சிகளில் விறுவிறுப்பு ஏற்றியுள்ளார் இயக்குனர் சிவாஜி. கதையில் பழமை சாயம்... ருக்ஷனா, சாந்தினி குகன் ஆகியோரும் உள்ளனர். ராஜாமணியின் ஒளிப்பதிவில் மலேசிய அழகு.

பொக்கிஷம்

செல்போன், இன்டர்நெட் என தகவல் தொடர்பு வளர்ச்சியான இக்கால காதலையும் கடிதங்களால் வளர்ந்த அக்கால காதலையும் காட்சிபடுத்தி காவியமாய் தந்துள்ளார் இயக்குனர் சேரன்.

கொல்கத்தாவில் கப்பல் என்ஜினீயராக பணியாற்றும் சேரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தந்தையை காண சென்னை வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் நாகூரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பத்மபிரியாவின் தாயும் ஆபரேசனுக்காக சேர்க்கப்படுகிறார். அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் வராத நிலையில் சேரன் பண உதவி செய்கிறார். அவருக்கு நன்றி சொல்கிறார் பத்மபிரியா. அது நட்பாக மலர்கிறது.

கொல்கத்தா திரும்பிய பிறகும் அந்த நட்பு கடிதம் மூலம் தொடர்ந்து காதலாக வளர்கிறது.

கம்யூனிஸ்டுவாதியான தந்தை விஜயகுமாருக்கு காதல் விஷயம் தெரிய சேரனை நாகூருக்கு அழைத்து போய் பெண் கேட்கிறார். பத்மபிரியா தந்தையும் மகளை கட்டித்தர சம்மதிக்கிறார். படிப்பு முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சந்தோஷத்தில் கொல்கத்தா திரும்புகிறார் சேரன். ஆனால் ஒரு மாதத்துக்கு பிறகு பத்மபிரியாவிடம் இருந்து கடிதங்கள் வருவது நின்று போகிறது. பதறி போய் நாகூருக்கு ஓடோடி வருகிறார். அங்கு வீட்டை விற்று விட்டு குடும்பத்தோடு பத்மபிரியா மாயமானது தெரிகிறது. அவர் தந்தை சதி செய்து பிரித்து விட்டதை தோழி மூலம் அறிந்து உடைகிறார்.

ஊரெல்லாம் தேடி அலைந்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. காலச்சக்கரம் சேரனை இன்னொரு பெண்ணுக்கு கணவாக்குகிறது. ஆனாலும் பத்மபிரியாவுக்கு எழுதி அனுப்பப்படாத கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாக்கிறார் சேரன். அவர் மறைவுக்கு பிறகு அக்கடிதங்கள் வளர்ந்து இளைஞனான மகன் கண்களில்படுகிறது. அவற்றை படித்து நெகிழ்ச்சியாகிறான். பத்மபிரியாவுக்கு எழுதி அனுப்பாமல் இருந்த கடிதங்களை அவரிடம் சேர்க்க தேடிப்புறப்படுகிறான். பத்மபிரியாவை கண்டு பிடித்தானா என்பது இதயங்களை பிழியும் கிளைமாக்ஸ்...

கடிதகாலத்து காதல் சந்தோஷங்களையும் வலிகளையும் அற்புதமாக பதிவு செய்துள்ள படம். சேரன் கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். உதவி, நட்பு, காதல், பிரிவு, துக்கம் அனைத்திலும் பல முகம் காட்டி வெளுத்துள்ளார்.

நட்பாக துவங்கும் கடித போக்குவரத்து உங்களை பார்க்க வேண்டும் என்று பத்மபிரியா ஆசைப்படுவதன் மூலம் காதலாக மாறுவது கவிதை. அஞ்சல் பெட்டியே கதி என கிடப்பது. காதலி கடிதத்துக்காக தபால்காரரை எதிர்பார்த்து தவிப்பது. டிரங்கால் போட்டு பலமணி நேரம் காத்து கிடப்பது அக்கால காதல் இம்சைகள்....

இறுதியில் காதல் தோல்வியில் துவண்டு சரியும் சேரன் நெஞ்சமெல்லாம் வியாபிக்கிறார்.

பத்மபிரியா இஸ்லாமிய பெண்ணாக வாழ்கிறார். காதலுக்கும் மதத்துக்கும் இடையில் அவர் படும் அவஸ்தைகள் அழுத்தம்.

முற்பகுதி கடித போக்குவரத்து கதையின் நீளத்தில் கத்தரி போடாதது சலிப்பு.... கிளைமாக்ஸ் “சீன்”களை உயிரோட்டமாக செதுக்கிய விதம் சேரனை வானளாவ உயர்த்துகிறது.

தந்தை விஜயகுமார் கொல்கத்தா நண்பன் இளவரசு மகன் ராஜேஷ் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. பழைய தபால் நிலையங்கள் கடிதங்கள், டைரிகள், தபால் பெட்டிகள் கொல்கத்தாவின் டிரம் வண்டிகள், பஸ்கள் என ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவு அக்காலத்துக்கு அழைத்து செல்கிறது. சபேஷ் முரளி இசையில் பாடல்கள் மனதை வருடும் ரகம்...

கவித்துவமான காதல் “பொக்கிஷம்”

நேசி

நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞன் விகாஸ். கல்குவாரி அதிபர். மகாதேவன் மகள் சோனியா சூரி. இருவரும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். பிறகு அது காதலாக மலர்கிறது.

மகள் காதல் விஷயம் மகாதேவனுக்கு தெரிய அதிர்ச்சியாகிறார். சோனியா சூரியை கொடைக்கானல் அழைத்து போய் தங்கை வீட்டில் சில தினங்கள் தங்க வைக்கிறார். ஊருக்கு திரும்பி அவசரம் அவசரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்.

காதலியை காணாமல் தவிக்கிறார் விகாஸ். நண்பர்கள் உதவியுடன் காதலி இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார். வேன் பிடித்து கொடைக்கானல் செல்லும்போது வழியில் கடத்தல் வழக்கில் போலீசிடம் சிக்குகிறார். மகாதேவன் சதியால் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். வீட்டுக்கு திரும்பும் சோனியா வேறு ஒருத்தருடன் திருமண ஏற்பாடு நடப்பது கண்டு அதிர்கிறார். முகூர்த்தத்துக்கு முந்தைய இரவு விகாஸ் விடுதலையாகி சோனியாவை கடத்தி போகிறார். அடியாட்கள் விரட்டுகின்றனர். காதல் ஜோடி என்ன ஆனார்கள் என்பது உலுக்கிப்போடும் கிளைமாக்ஸ்...

நீண்ட தாடி, அழுக்கு உடம்புடன் பிச்சைக்காரர்கள் மத்தியில் இருக்கும் விகாஸ்யாக குண்ட தீயை ஓடோடி போய் அனைத்து கல்லெறி வாங்கி சரியும்போது, எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார். அங்கிருந்து பிளாஷ்பேக் விரிகிறது.

விகாஷ்-சோனியா மோதிக்கொள்ளும் சீன்கள் சுவாரஸ்யமானவை. தந்தையிடம் தன்னை பற்றி அவதூறு சொன்னதற்காக பழிவாங்க ஆவேசத்துடன் வரும்போது மழையில் நனைந்தப்படி ஊஞ்சலில் ஆடும் சோனியாவை பார்த்து காதல் வயப்படுவது அழகு.

மகளை பாசத்துடன் அழைத்து போய் தங்கை வீட்டில் விட்டு விட்டு உன்னால ஒரு சாவு விழுந்ததுபோல் அவளால் இன்னொரு சாவு நடக்கக் கூடாது என்று சொல்லிவை என மகாதேவன் கர்ஜிப்பது... காதலியை தேடி வரும் விகாஷ¨ம் நண்பர்களும் போலீசில் மாட்டுவது திருப்பங்கள்.

திருமண வீட்டில் இருந்து சோனியாவை அழைத்துக்கொண்டு ஓடுவதும் அடியாட்கள் துரத்துவதும் பரபர சீன்கள்.

கிளைமாக்ஸ் ரத்தத்தை உறைய வைக்கிறது.

காதல் சுகுமார் காமெடியில் சிரிப்பு இல்லை. வழக்கமான கதைதான் என்றாலும் கிளைமாக்சில் நிமிர வைக்கிறார் இயக்குனர் சரவண கிருஷ்ணா. சிற்பி இசையில் பாடல்கள் இனிமை.

வண்ணத்துப்பூச்சி


நகர பரபரப்பில் தொழிலிலேயே மூழ்கி கிடக்கும் பெற்றோருக்கு மகளாக வளர்கிறார் திவ்யாபாரதி. தாய்-தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்குகிறாள். அவளை விடுமுறைக்கு தாத்தா பாலசிங்கிடம் வசிக்க கிராமத்துக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள சூழ்நிலைகள் பிடித்துப்போகிறது. பாசம் பொழியும் தாத்தா பிரியமாக பழகும் கிராம மக்கள், தோழிகள் எல்லோரும் அவளுக்குள் ஆழமாய் பதிகிறார்கள்.

திவ்யாபாரதியை வீட்டுக்கு அழைத்து செல்ல தந்தை-தாய் வருகின்றனர். ஆனால் அவர்களுடன் செல்ல மறுக்கிறாள். பெற்றோரை பிரிந்து கிராமத்தில் தாத்தாவுடன் வாழ அனுமதிக்கக் கோரி கோர்ட்டுக்கும் செல்கிறாள்.

இந்த விச்சித்திர வழக்கை நீதிபதி ரேவதி விசாரிக்கிறார். அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்பது கிளைமாக்ஸ்...

குழந்தைகளை மறந்து எந்திரத்தனமாக வாழும் நகர்புற பெற்றோர்களையும் பிள்ளைகளின் ஆசாபாசங்களையும் உயிரோட்டமான காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் அழகப்பன்.சி.

பட்டணத்து பெற்றோராக வரும் சித்தார்த், மாதவி கம்ப்யூட்டர் யுக ஹைடெக் வாழ்க்கையில் கச்சிதமாக பொருந்துகின்றனர். திவ்யா பாரதியாக வரும் ஸ்ரீலட்சுமியும், பாலாசிங்கும் பேத்தி, தாத்தாவாக வாழ்ந்துள்ளனர்.

உடல் நலக்குறைவு ஏற்பட்ட பாலாசிங்குக்கு கசாயம் காயத்து கொடுப்பது... கூலி வேலை செய்து தாத்தாவுக்கு சட்டை வாங்கி கொடுப்பது... கிராமத்தினருக்கு கடன் கொடுத்து சுரண்டும் ஆசாமிக்கு அறிவுரை சொல்லி திருத்துவது என அசத்தியுள்ளார்.

அரிதாரம் பூசாத கிராமத்து மனிதர்கள் அழுத்தமான கதையோட்டம் பலம். நாடகத்தன காட்சிகளும் நீளமான வசனங்களும் வேகத்தடை போடுகின்றன.

ரேஹான் இசையில் பாடல்கள் இனிமை.

அழகர் மலை

நெப்போலியனும், ஆர்.கே.வும் அண்ணன் தம்பிகள். அழகர் மலையில் வசிக்கின்றனர். ஆர்.கே சதா குடி கொண்டாட்டம் என திரிகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் பெண் தேடுகிறார்.

அதே ஊரில் வசிக்கம் நெப்போலியன் பகையாளி லால் சதி செய்து ஆர்.கே.வுக்கு திருமணம் நடக்க விடாமல் தடுக்கிறார். பெண் பித்தர், குடிகாரன் என்றெல்லாம் முத்திரை குத்தி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் ஆர்.கே.வை வெறுத்து பெண் கொடுக்க மறுக்கும்படி செய்து விடுகிறார்.

தன்னால் ஊரார் மத்தியில் அண்ணன் நெப்போலியனுக்கு அவமரியாதை ஏற்பட ஆர்.கே.வுக்கு மனமாற்றம். குடியை விடுகிறார். அப்போது தோழி வீட்டுக்கு வரும் பானு கண்ணில் பட காதல். இருவருக்கும் சென்னையில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆர்.கே.வை கொன்று திருமணத்தை நிறுத்த வில்லனை ஏவுகிறார் லால். அவனை முறியடித்து பானுவை ஆர்.கே. மணப்பது கிளைமாக்ஸ்....

ஆக்ஷன். காமெடி, சென்டிமெண்டில் அழுத்தமாக காலூன்றி புது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே. போதை தள்ளாட்டத்திலும் வடிவேலுவுடன் தண்ணி அடித்து கலாய்ப்பதிலும்... பானுவிடம் வடிவேலுவை காதல் தூது அனுப்பி சிக்கலில் மாட்ட வைக்கும் அப்பாவித்தனத்திலும் அசத்துகிறார்.

பானுவின் காதல் சீன் தொகுப்புகள் அழகானவை. வடிவேலு காமெடி பெரிய பலம். கிளாஸ் நிறைய மதுவை ஊற்றி தண்ணீரை தெளித்து குடிப்பது... காதலுக்கு ஐடியா கொடுத்து விட்டு பிரச்சினைகளில் மாட்டி உதைபடுவது பணத்தை திருட வந்த சோனாவிடம் காதல் வயப்படுவது என காமெடி தர்பாரே நடத்துகிறார்.

நெப்போலியன் பாசக்கார அண்ணனாக பளிச்சிடுகிறார். லால் மிரட்டல் வில்லன். இருவரும் காவி உடுத்தி சம்சாதிகளாய் வாழும் பிளாஸ்பேக் கதை அழுத்தமானது. சோனா கவர்ச்சி வில்லி. இளையராஜாவின் பாடல்களில் பழைய சுவை. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவிலும் குளிர்ச்சி.

குடும்ப உறவுகளின் பின்னணியில் காதல், பகை, காமெடி, சென்டிமென்ட் என கச்சிதமாக தொகுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். கதை ஓட்டத்தில் இன்னும் வலு சேர்த்து இருந்தால் கூடுதல் மெருகேறியிருக்கும்.

மலை மலை


பிரபு, அருண்விஜய் பாசக்கார அண்ணன் தம்பிகள். அருண் விஜய் பழனியில் வேன்டிரைவர் வேலை பார்க்கிறார். அநியாயத்தை கண்டு சீறுவது அவர் குணம். பெண்ணை மானபங்கம் செய்பவனை நொறுக்குகிறார்.

அவர் செயல் எதிர்வீட்டில் விருந்துக்கு வரும் சென்னை பெண் வேதிகாவை ஈர்க்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர். பிறகு வேதிகா ஊர் திரும்பி விடுகிறார். அவரை தேடி சென்னை வருகிறார் அருண்விஜய். அப்போது பரங்கிமலையில் ரவுடி ராஜ்யம் நடத்தி அரசியலில் கால்பதிக்க துடிக்கும் பிரகாஷ்ராஜ் குறுக்கிடுகிறார். பிரகாஷ்ராஜூக்கு கிடைக்க இருந்த எம்.எல்.ஏ. சீட் அருணால் பறிபோகிறது. இதனால் ஆவேசமாகி தீர்த்துகட்ட அலைகிறார். அருண் விஜய்யோ இன்னொரு புறம் காதலியை கண்டு பிடிப்பதுடன் பிரகாஷ்ராஜூக்கு சவால் விட்டு அவரை திருமணம் செய்யவும் தயாராகிறார். ஜெயிப்பது யார் என்பது விறுவிறு கிளைமாக்ஸ்...

அருண்விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியுள்ள படம். கடாமீசையுடன் பஸ் நிலையத்தில் ரவுடிகளை துவம்சம் செய்து அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம். வேதிகாவுடன் காதல். அண்ணன் பிரபுவை கஸ்தூரியுடன் சேர்த்து வைக்க பொய்சொல்லி பெண் பார்க்கும் தந்திரம்... சென்னையில் கொரியர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கஞ்சாகருப்பு, சந்தானம் கூட்டணியில் செய்யும் அலப்பறைகள் கலகலப்பானவை...

பிரகாஷ்ராஜ் வருகைக்கு பின் கதை ரெக்கை கட்டுகிறது. என்கவுண்டர் போலீசிடம் இருந்து தப்ப தனது வேனை எடுத்து செல்லும் பிரகாஷ்ராஜை மடக்கி பிடிக்க அருண்விஜய் சைக்கிளில் துரத்துவது மாயாஜாலவித்தை கிளைமாக்ஸ் சண்டையில் ஹாலிவுட் அதிரடி...

வேதிகா காதலித்தும் வில்லன் கூட்டத்தில் சிக்கி தவித்தும் இருமுகம் காட்டுகிறார். பாசமான அண்ணனாக பிரபு பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் கஸ்தூரி இறந்ததை மறைத்து அருண்விஜய் திருமணத்தை போனிலேயே நடத்தி வைப்பது உருக்கம். பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் மிரட்டல் கஞ்சா கருப்பு, சந்தானம் மயில்சாமி, ஆர்த்தியின் காமெடி தர்பார் வயிற்றை புண்ணாக்கும் ரகம்.

காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கி பிரமாண்டபடுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கதையை புதுமையாக சொல்லி இருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும் மனிசர்மா பின்னணி இசையும் வெங்கடேஷ் ஒளிப்பதிவும் பக்கபலம்.